அப்படியே வழுக்கிக் கொண்டு போன பஸ்.. நல்ல வேளை.. மொத்தப் பேரும் தப்பிச்சாங்க!
- மஞ்சுளா தேவி
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் மழையால் சாலை ஈரமாக இருந்த நிலையில் வளைவில் சற்று வேகமாக திரும்பிய தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழப் போனது. நல்ல வேளையாக டிரைவரின் சமயோஜிதத்தால் பேருந்து பெரும் விபத்திலிருந்து தப்பியது.
மழைக் காலங்களில் வாகனங்களை ஓட்டுவதே பெரும் சர்க்கஸ் செய்வது போன்றுதான். கொஞ்சம் சுதாரிக்காவிட்டாலும் வாகனங்கள் வழுக்கிக் கொண்டு போய் விபத்தில் சிக்கி விடும். பெரும்பாலும் டூவீலர்கள்தான் மழைக்காலங்களில் அதிகம் விபத்தில் சிக்கும். ஆனால் கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒரு பெரிய பேருந்தே வழுக்கிக் கொண்டு போன காட்சி பார்ப்போரை அதிர வைத்து விட்டது.
அரபிக் கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருக்கிறது. மழையால் பாலக்காட்டில் உள்ள சாலை முழுவதும் ஈரமாக இருந்தது. இந்நிலையில் பாலக்காடு அருகே சாலையில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
ஒரு வளைவில் பஸ் வேகமாக திரும்பியபோது அப்படியே சாலையில் வழுக்கிக் கொண்டு போனது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேகமாக இப்படியும் அப்படியுமாக வழுக்கிக் கொண்டு போய் ,சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி அப்படியே நடு ரோட்டில் திரும்பி நின்றது.
அதிர்ஷ்டவசமாக டிரைவர் சமயோஜிதமாக பஸ்ஸை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியதால் பஸ் கவிழாமலும், பெரும் விபரீதம் ஏற்படாமலும் அனைவரும் தப்பினர். சாலையில் அந்த சமயத்தில் வாகனங்கள் அதிகம் இல்லை என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவும் இல்லை பஸ்சுக்குள் இருந்த சிலருக்கு மட்டுமே லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பயணிகள் அனைவரும் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அனைவரும் பஸ்சை விட்டு இறங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.