அரசு பேருந்தை வழிமறித்த தனியார் பேருந்து.. தினசரி இதே பஞ்சாயத்தா போச்சே.. மக்கள் அதிருப்தி!

Su.tha Arivalagan
Jan 20, 2024,05:09 PM IST
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து எஸ்.பி.பட்டிணம் செல்லும் அரசுப் பேருந்துகளை, தனியார் பேருந்துக்காரர்கள் நடு வழியில் தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

எல்லாத்துக்கும் காரணம் இந்த "டைமிங்" பிரச்சினைதான். காரைக்குடி பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல நேரங்களில் அந்த டைமுக்கு பஸ்களை எடுக்காவிட்டால் அரசு மற்றும் தனியார் பேருந்து டிரைவர்களிடையே வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம்தான்.



ஆனால் இப்போது புதுவித பிரச்சினை உருவாகியுள்ளதாம். அதாவது அரசு பஸ், தன்னை முந்திக் கொண்டு போய் விட்டால், தனியார் பேருந்து டிரைவர்கள் சண்டைக்கு வருகிறார்களாம். இதுபோன்ற சம்பவங்கள் காரைக்குடியிலிருந்து தினசரி காலையில் எஸ்.பி.பட்டிணம்  செல்லும் அரசு பேருந்துகளுக்கு ஏற்படுகிறதாம்.

அதாவது தங்களை முந்திக் கொண்டு அரசு பஸ் போய் விட்டால், உடனே வேகமாக போய் அதைத் தடுத்து நிறுத்தி, நடு ரோட்டிலேயே நிறுத்தி, ஏன் இப்படி முந்திட்டுப் போறீங்க என்று அரசு டிரைவருடன், தனியார் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். நடு ரோட்டில் இப்படி பஸ்ஸை நிறுத்தி பிரச்சினை செய்வதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வோர் கடும் பாதிப்பும், அதிருப்தியும் அடைகின்றனர்.



காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் தனியார் பேருந்து ஒன்று, செஞ்ஜை  பகுதியில் நேற்று அரசு பேருந்தை இதுபோல வழிமறித்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் பெரும்பான்மையான பொதுமக்கள் இதன் மூலம் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மாதத்தில் பெரும்பான்மையான நாட்கள் இதுபோன்று நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தனியார் பேருந்தின் இதுபோன்ற  செயல்பாடுகளுக்கு தடை விதிப்பது எப்போது ? விபத்து ஏதும்  ஏற்படும் முன்பு  இந்த நிலை சரிசெய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இதுபோன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, தவறு செய்வோரை சரியான முறையில் கண்டிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.