திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி.. 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு

Su.tha Arivalagan
Jan 02, 2024,10:27 AM IST

திருச்சி:  பிரதமர் நரேந்திர மோடி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தற்போது வந்துள்ளார். அங்கு தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


முன்னதாக திருச்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றார்கள்.


இதைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து நடைபெறும் அரசு விழாவில் அவர் ரூ. 19,850 கோடி யிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார், பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.




பிரதமரின் பயணத்தில் முக்கியமானது ரூ. 1100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத் திறப்பு விழாதான். சர்வதேச தரத்திற்கு இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார். ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டுக்கு வருவது குறித்து பிரதமர் மோடி டிவீட் போட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் திருச்சியில் எனது 2 நாள் பயணத்தைத் தொடங்குகிறேன். அங்கு பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் பேசவுள்ளேன். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தைத் தொடங்கி வைக்கவுள்ளேன். பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கவுள்ளேன். இது மக்களுக்குப் பயன் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.


3 அடுக்கு பாதுகாப்பு


பிரதமர் வருகையைத் தொடர்ந்து திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி பஸ் நிலையம், ரயில் நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்வோர் விமான நிலையப் பாதையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விராலிமலை வழியாக அவர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பிரதமர் பயணம் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை அறிய Live page  உடன் இணைந்திருங்கள்