பலவீனமான பிரதமராகி விட்டார் மோடி.. ராகுல் காந்தி தன்னை நிரூபித்து விட்டார்.. பிரஷாந்த் கிஷோர்

Su.tha Arivalagan
Oct 02, 2024,02:35 PM IST

டெல்லி:   பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு போய் விட்டது. அவர் மிகவும் பலவீனமான பிரதமராக இருக்கிறார். அதேசமயம், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி தன்னை ஸ்திரப்படுத்தி விட்டார். தனது திறமையை நிரூபித்து விட்டார். பிரதமர் மோடியின் 3வது அரசு எத்தனை காலம் நீடிக்கும் என்பது கேள்விக்குறி என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.


பிகே என்று அழைக்கப்படும் பிரஷாந்த் கிஷோர், தேர்தல் உக்கி வகுப்பாளராக அரசியல் களத்தில் அறியப்பட்டவர். இவர்தான் முதல் முதலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணமாக அமைந்தார். இவர் வகுத்துத்  தந்த திட்டங்களைத்தான் பாஜக மோடிக்காக கடைப்பிடித்தது. மோடி முதல் முறை பிரதமராக பிகேவும் முக்கியக் காரணம். அதன் பிறகு பல்வேறு கட்சிகளுக்கும் பிஆர் வேலை பார்த்தவர் பிகே. 




திமுக, திரினமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று இவரால் பலன் அடைந்த கட்சிகள் அதிகம். காங்கிரஸுக்கும் கூட இவர் பணியாற்ற தீவிரமாக முயன்றார். ஆனால் ராகுல் காந்தியை ஒதுக்கி விட்டு அவர் வைத்த ஸ்டிராட்டஜியை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விடவே, காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற பிகேவால் முடியவில்லை. இந்த கோபத்தில் இன்னும் பல வருடங்களுக்கு பாஜகதான் ஆட்சியில் இருக்கும். பாஜக அசுரத்தனமாக வளர்ந்திருக்கிறது என்றெல்லாம் கூறி வந்தார் பிகே. ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய் விட்டது. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிதான் மத்தியில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலைியல் பிரதமர் மோடி பலவீனமாகி விட்டதாக பிகே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரஷாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தித் தளத்துக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


பிரதமர் மோடி இப்போது பலவீனமாகி விட்டார். கடந்த 2 முறை ஆட்சியில் இருந்தபோது அவர் எப்படி இருந்தாரோ அப்படி இப்போது இல்லை. அப்போது இருந்த செல்வாக்கும், மவுசும் இப்போது இல்லை. அவை மங்கிப் போய் விட்டன. அதேசமயம், பாஜகவுக்கு மக்கள் வெற்றியைத் தொடர்ந்து கொடுத்து வந்தாலும் கூட அவர்களின் வாழ்க்கைத் தரம் மாறவில்லை. உதாரணத்திற்கு பீகாரில் பாஜகவுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கடந்த தேர்தலில் கூட 30 சீட்டுகளுக்கு மேல் பாஜக கூட்டணிக்குக் கொடுத்துள்ளனர். ஆனால் மக்கள் நிலைமை மாறவில்லை. இன்னும் சிரமப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர்.


அடுத்த  இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துதான் பாஜகவின் எதிர்கால அரசியல்  இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் 9 மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தோல்வி அடைந்தால், தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மை சீர்குலையும், அதன் ஆயுள்காலம் கேள்விக்குறியாகும்.  அதேசமயம், 9 மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியைப் பெற்றால், ஆட்சிக்கு பெரிதாக ஆபத்து இருக்காது.


ராகுல் காந்தி நிரூபித்து விட்டார்




காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு விட்டார். அவர் தன்னை நிரூபித்து விட்டார் என்றுதான் கூற வேண்டும். அதேசமயம், தேசியத் தலைவராக அவர் தன்னை முழுமையாக நிரூபிக்க இன்னும் அவர் நிறைய செய்ய வேண்டியுள்ளது.  காங்கிரஸ் கட்சிக்குள் இப்போது தன்னை அவர் நிரூபித்து விட்டார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. 2024 தேர்தலில் 90 சீட்டுகளை காங்கிரஸ் வென்றுள்ளது மிகப் பெரிய விஷயம்.  இதற்கு ராகுல் காந்திதான் காரணம் என்பதை மறுக்க முடியாது.


அதேசமயம், 1977ம் ஆண்டு  தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைத்த போதும் கூட இந்திரா காந்தி தலைமையில் 154 சீட்டுகளை காங்கிரஸ் வென்றது. எனவே ராகுல் காந்தி  அந்த அளவுக்கு இன்னும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். இந்திரா காந்தி மிகப் பெரிய தேசியத் தலைவராக இருந்தார். ராகுல் காந்தி அந்த நிலையை இன்னும் அடையவில்லை.


பீகாரில் பாஜக படு தோல்வி அடையும்




பீகார் அரசியலில் பாஜகவின் நற்பெயர், நிதீஷ் குமாரால் கெட்டுப் போய் விட்டது. லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சியை காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்து வந்ததால்தான் காங்கிரஸ் கட்சியை பீகார் மக்கள் தூக்கிப் போட்டனர். தற்போது நிதீஷ் குமாரால், பாஜகவுக்கும் அதே கதிதான் பீகாரில் ஏற்படும். பாஜகவை பீகார் மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள்.


நிதீஷ் குமார் தனது அரசியல் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் உள்ளார். மன ரீதியாக அவர் ஸ்திரமாக இல்லை. உடல் ரீதியாகவும் அவர் ஆரோக்கிமயாக இல்லை. இவரால் பீகார் போன்ற மாநிலத்தை வழிநடத்துவது கடினம். அதை பாஜகவும் உணர்ந்துள்ளது. 


பீகாரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது நிதீஷ்குமார் எதுவுமே செய்யவில்லை. முக்கியப் பிரச்சினைகளில் தொடர்ந்து அவர் மெளனம் சாதிக்கிறார். அவர் ஒரு முதல்வராக செயல்படத் தவறி விட்டார். அரசை நடத்தும் தகுதியையும் அவர் இழந்து விட்டார். பீகார் மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர் என்றார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்