கலாம்,  பிரதீபா பாட்டீல் வரிசையில்.. சுகோய் போர் விமானத்தில் பறக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

Su.tha Arivalagan
Apr 06, 2023,04:47 PM IST
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் வரிசையில், தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் சுகோய் 30 போர் விமானத்தில் பறக்க திட்டமிட்டுள்ளார்.சனிக்கிழமை அவர் சுகோய் விமானத்தில் பயணிக்கவுள்ளார்.

மக்களின் ஜனாதிபதி என்ற செல்லப் பெயர் கொண்ட மறைந்த குடியரசுத் தலைவர்  அப்துல் கலாம் சுகோய் போர் விமானத்தில் பறந்து புதிய சாதனை படைத்தவர். 2003ம் ஆண்டு அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது புனேவில் உள்ள லோஹேகான் விமானப்படைத் தளத்திலிருந்து சுகோய் போர் விமானத்தில் பயணித்து புதிய சாதனை படைத்தார். இந்திய ஜனாதிபதி ஒருவர் சுகோய் போர் விமானத்தில் பறந்தது அதுவே முதல் முறையாகும். அப்போது கலாமுக்கு வயது 74.



அந்தப் பயணம் குறித்து பின்னர் கலாம் கூறுகையில், காக்பிட்டுக்குள் அமர்ந்தபோது நான் 8 வயதுப் பையனாக மாறி விட்டேன். போர் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு நனவாகி விட்டது என்று கூறியிருந்தார் கலாம்.

அவரைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் சுகோய் 30 போர் விமானத்தில் பறந்து புதிய அத்தியாயம் படைத்தார். சுகோய் போர் விமானத்தில் பறந்த 2வது குடியரசுத் தலைவர் மட்டுமல்லாமல், முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. இதே புனே விமானப்படைத் தளத்திலிருந்துதான் அவரும் சுகோய் போர் விமானத்தில் பயணித்தார். சூப்பர்சானிக் வேகத்தில் அந்தப் போர்விமானம் பறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வரிசையில் தற்போது  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் இணையவுள்ளார். வருகிற சனிக்கிழமை அவர் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் விமானப்படைத் தளத்திலிருந்து சுகோய் 30 போர் ��ிமானத்தில் அவர் பறக்கவுள்ளார்.  ஏப்ரல் 6ம் தேதி முதல் 8ம்தேதி வரை குடியரசுத் தலைவர் அஸ்ஸாமில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். 8ம் தேதி அவர் சுகோய் போர் விமானத்தில் பறக்கவுள்ளார்.

7ம் தேதி காஸிரங்கா தேசிய பூங்காவில் கஜ உத்சவ் எனப்படும் யானைகள் திருவிழாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார். பின்னர் குவஹாத்தியில் கஞ்சன்ஜங்கா மலையேற்ற விழாவைத் தொடங்கி வைக்கிறார். அதே நாளில் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழாவையும் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்து பங்கேற்கிறார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகோயில் பயணித்த அரசியல் தலைவர்கள்

இந்தியாவில் வெகு சில தலைவர்களே சுகோய் போர் விமானத்தில் பறந்துள்ளனர். குடியரசுத் தலைவர்கள் தவிர்த்துப் பார்த்தால், 2003ம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சுகோய் போர் விமானத்தில் பறந்துள்ளார்.  அவருக்கும் அப்போது வயது 73 தான்.

2015ம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் சுகோயில் பயணித்தார். 2015ம் ஆண்டு பெங்களூரில் நடந்த ஏரோ இந்தியா ஷோவின்போது பாஜகவைச் சேர்ந்தத ராஜீவ் பிரதாப் ரூடி சுகோயில் பயணித்தார். அவர் ஒரு பயிற்சி பெற்ற விமானி ஆவார்.

2016ம் ஆண்டு அப்போதைய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு சுகோயில் பயணித்தார்.

2018ம் ஆண்டு அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுகோய் போர் விமானத்தில் பயணித்துள்ளார். இவர்தான் சுகோய் போர் விமானத்தில் பறந்த 2வது இந்தியப் பெண் தலைவர் ஆவார்.