New Governors: மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம்.. புதுச்சேரிக்கு கைலாஷ்நாதன்

Su.tha Arivalagan
Jul 28, 2024,01:29 PM IST

டெல்லி: ஜாரக்கண்ட் மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் வகித்து வந்த சி.பி. ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். புதுச்சேரிக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாஷ்நாதன் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


9 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். அதேபோல 3 மாநில ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விவரம்:




மகாராஷ்டிரா - சி. பி.ராதாகிருஷ்ணன்

தெலங்கானா - ஜிஷ்ணு தேவ் வர்மா

ஜார்க்கண்ட் - சந்தோஷ் கங்வார்

சட்டிஸ்கர் - ராமென் தேக்கா

ராஜஸ்தான் - ஹரிபா கிசன் ராவ் பாக்டே

சிக்கிம் - ஓ.பி. மாத்தூர்

மேகாலயா - விஜய் சங்கர்

அஸ்ஸாம் - லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா

பஞ்சாப் - குலாப் சந்த் கட்டாரியா (சண்டிகர் துணை நிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு)

புதுச்சேரி - கைலாஷ்நாதன்


இவர்களில் சந்தோஷ் கங்வார் தீவிர பாஜக தலைவர். லோக்சபா தேர்தலில் பரேலி தொகுதியில் இவர் போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆனால் சீட் கிடைக்கவில்லை. அந்தத் தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்றவர் இவர். அதிருப்தியில் இருந்து வந்த அவரை தற்போது ஆளுநராக்கியுள்ளது பாஜக மேலிடம். கடந்த லோக்சபா தேர்தலில் உ.பி, பீகாரில், குர்மி என்ற ஓபிசி சமுதாயத்தின் வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை. அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான் கங்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாக்டே, முன்னாள் மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகர் ஆவார்.  மகாராஷ்டிராவிலும் பாஜக கடந்த லோக்சபா தேர்தலில் சரிவைச் சந்தித்தது நினைவிருக்கலாம். 


இவர்களில் விஜய்சங்கரின் கதை வித்தியாசமானது. இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். முன்னாள் லோக்சபா எம்.பி. பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்து கடந்த 2019ம் மீண்டும் பாஜகவுக்கே வந்தவர். மேகலாயா ஆளுநராகியுள்ளார் விஜய்சங்கர்.


குஜராத்திலிருந்து வரும் கைலாஷ்நாதன்


புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாஷ்நாதன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அதை விட முக்கியமாக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது 2013 முதல் 2014 வரை அவரது தலைமை முதன்மைச் செயலாளராக இருந்தவர் கைலாஷ் நாதன்.


பஞ்சாப் ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்திருந்தார். அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டு அவரை விடுவித்துள்ளார்.