ராஜ்யசபா சீட்கண்டிப்பாக எங்களுக்கு உண்டு.. அதிமுகவுடன் ஒப்பந்தமே போட்டிருக்கோம்..பிரேமலதா விஜயகாந்த்
Feb 12, 2025,01:39 PM IST
சென்னை: ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுகவுடன் ஒப்பந்தமே போடப்பட்டுள்ளது. எனவே தேமுதிக வேட்பாளர் யார் என்பதை விரைவில் முடிவு செய்வோம் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது தேமுதிக. அதற்கு முந்தைய சட்ட.சபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடம் பெற்ற கூட்டணியில் தேமுதிக இருந்தது. கடந்த லோக்சபா தேர்தலின்போதே ராஜ்யசபா சீட்டையும் அதிமுகவிடம் கேட்டிருந்தது தேமுதிக. ஆனால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதா எந்த அறிவிப்பையும் அதிமுக அப்போது வெளியிடவில்லை.
இந்த நிலையில் வருகிற ஜூலை மாதம் தமிழ்நாட்டில் உள்ள 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் அதிமுக சார்பில் 2 பேரைத் தேர்ந்தெடுக்க முடியும். திமுக சார்பில் 4 பேரை தேர்வு செய்ய முடியும். அதிமுக சார்பில் காலியாகும் 2 இடங்களிலும் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒரு சீட் தருமா என்ற கேள்வி எழுந்தது. காரணம், நீண்ட காலமாகவே கூட்டணிக் கட்சிகளிடம் ராஜ்யசபா சீட் கேட்டு வருகிறது தேமுதிக. ஆனால் யாருமே இதுவரை தந்தது கிடையாது.
இந்த நிலையில் வருகிற ராஜ்யசபா தேர்தலிலாவது தேமுதிகவுக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதிமுகவுடன் இதுதொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாக தற்போது பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடையே அவர் பேசுகையில், ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுகவுடன் பேச்சு மட்டும் நடத்தவில்லை. ஒப்பந்தமே போடப்பட்டுள்ளது. எனவே தேமுதிக சார்பில் யார் போட்டியிடுவது என்பதை விரைவில் முடிவு செய்வோம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
இதனால் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் போட்டியிடும் என்று தெரிகிறது. ஆனால் அதிமுக தரப்பு இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அவர்கள் அறிவிக்காமல், பிரேமலதா விஜயகாந்த்தே இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.