காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.. ஆளுநரிடம் கோரிக்கை வைத்த பிரேமலதா விஜயகாந்த்!

Meenakshi
Sep 30, 2023,04:59 PM IST

சென்னை:  காவிரி விவகாரம் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.


பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக கட்சியினர் இன்று ஆளுநர் ஆர். என்.ரவியை சந்தித்தனர். அப்போது காவிரிப் பிரச்சினை தொடர்பாக மனு ஒன்றை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.


இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், காவிரி நீரை கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு பெற்று தரவேண்டியது அரசின் கடமையாகும். தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க கச்சதீவினை மீட்க வேண்டும். தமிழக கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும். டாஸ்மாக் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என பலதரப்பட்ட கோரிக்களை முன் வைத்தோம்.




தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய காவிரி நீர் விவகாரம் குறித்து மத்திய அரசு செவி சாய்த்து, நமது விவசாயிகளின் உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக்கொண்டேன். இது பல வருடமாக தொடர்ந்து வருகிறது. நீண்டகாலமாக தொடரும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், தேசிய நதிகளை இணைப்பதே தீர்வாகும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும். 


இந்த முறை கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தர வேண்டும். கர்நாடகா உபரிநீரை வைத்துக்கொண்டே தமிழகத்திற்கு தர மறுக்கிறது. அவர்கள் தமிழக மக்கள், தமிழக முதல்வர், தமிழகத்திற்கு எதிராக செய்யும் அனைத்து செயல்களுமே கண்டனத்திற்குரியதாகும். 


தமிழக நீர்வளத்துறை அமைச்சர் டெல்லி சென்று வருகிறார், ஆனால் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.  நிரந்தரத் தீர்வு எப்போது என்று தெரியவில்லை. எதற்காக நாம் கர்நாடகாவிடம் கையேந்தி நிற்க வேண்டும். விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்று கவர்னரிடம் வலியுறுத்தினோம்.




அதேபோல என்எல்சி பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். பிரச்சினை இன்று வரை தீராமல் உள்ளது. அதுகுறித்தும் கவனர்னரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்.


நமது மீனவ மக்கள் தங்களது தொழிலை செய்ய முடியாமல்தடுக்கப்படுகின்றனர். அந்தப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு ஏற்பட்டு தைரியமாக தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அதற்கு கச்சத்தீவை மீட்க வேண்டியது அவசியம். அதை ஆளுநரிடம் எடுத்துச் சொல்லியுள்ளோம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்