தமிழ்நாட்டையே புரட்டி போட்ட கனமழை.. பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா..?

Manjula Devi
Oct 14, 2024,10:44 AM IST

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் நேற்று அநேக இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை  தொடங்க உள்ளது. இதன் அறிகுறியாக தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று பெய்த கன மழை தமிழ்நாட்டையே புரட்டி போட்டுள்ளது. அந்த அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் கன முதல் அதிக கன மழை வரை கொட்டி தீர்த்துள்ளது.


நேற்று பல இடங்களில் கனமழை பெய்த நிலையில் தற்போது வரை அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் என குளுமையான சூழல் நிலவுகிறது.




கள்ளக்குறிச்சி: 


கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு உட்பட்ட திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, ஆவியூர், கலப்பாக்கம், கொளத்தூர்,கீரையூர், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.


விழுப்புரம்: 


விழுப்புரம் மாவட்டம் அரகநல்லூர், தேவனூர் ,கோட்டமருதூர், காரனுர் சிறுவனை நல்லூர், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது.


சென்னை: 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக நேற்று விடிய விடிய நல்ல மழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த மழையால் மட்டும் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அதிகரித்து வருகிறது.


சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் 7.4 சென்டிமீட்டர் மழையும்,நந்தனத்தில் 4.7 சென்டிமீட்டர் மழையும், அண்ணா பல்கலைக்கழகப் பகுதிகளில் 4 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்த நிலையில் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது.


கோவை: 


கோவையில் நேற்று சுமார் மூன்று மணி நேரம்  கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் மிதமான மழையும் பெய்தது. இதனால் ஆங்காங்கே காற்றாற்று வெள்ளம் போல் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு செய்வதறியாமல் தவித்து வந்தனர். 


அதேபோல் சாலையில் நீண்ட நேரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் 7.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கோவையில் நேற்று மாலை முதல் விடிய விடிய நல்ல மழை பெய்த போதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அரக்கோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.


மதுரை:


மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார நேற்று முன்தினம் இரவு சுமார் 3 மணி நேரம் பரவலாக கனமழை  வெளுத்து வாங்கியது. இதனால் ஆங்காங்கே மழை வெள்ளம் சூழ்ந்தது.அதே சமயம் அழகர் கோவில் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது.


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 5 சென்டிமீட்டர் மழையும், சேலத்தில் 4 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்