"என் மீது நம்பிக்கை வைத்தோருக்கு நன்றி".. டிவீட் போட்டு தேங்க்ஸ் சொன்ன பிரகாஷ் ராஜ்!
சென்னை: பிரணவ் ஜூவல்லரி நகைக் கடை நடத்திய மோசடியில் தனக்குத் தொடர்பில்லை என்று பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் விளக்கியுள்ளது குறித்து டிவீட் போட்டு, தன் மீது நம்பிக்கை வைத்தோருக்கு நன்றி என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு மிகப் பெரிய நகை மோசடி சம்பவங்கள் - ஆருத்ரா கோல்டு மோசடி மற்றும் பிரணவ் நகைக் கடை மோசடி. இரு நிறுவனங்களுமே தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளனர்.
இந்த இரு நிறுவன மோசடிகளிலும் தொடர்புடையோர் அடுத்தடுத்துக் கைதாகி வருகின்றனர். இதில் பிரணவ் ஜூவல்லரி நகை மோசடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெயரும் இழுக்கப்பட்டது. அவர் இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்திருந்ததால், அவர் மீதும் விசாரணை நிழல் படிந்தது. அவர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பிரணவ் நகைக்க கடை அதிபர் மதன் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கார்த்திகாவும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் நிடத்திய விசாரணையின்போது பிரகாஷ் ராஜுக்கும் இந்த நகைக் கடை மோசடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாகவும், இதனால் அவரிடம் விசாரணை நடத்தப்படாது என்றும் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் விளக்கியுள்ளனர்.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ் தற்போது டிவீட் போட்டுள்ளார். அதில், விசாரணைக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனக்கும் இந்த மோசடிக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளனர். என்னை நம்பியோருக்கும், என்னை புரிந்து கொண்டு உடன் இருந்தோருக்கும் எனது நன்றிகள். வாய்மையே வெல்லும் என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.