"தேங்க் யூ சார்".. பிரதமரை பார்த்துத் திரும்பிய பிரக்ஞானந்தா நெகிழ்ச்சி!

Su.tha Arivalagan
Sep 01, 2023,09:36 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் சென்று சந்தித்தார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கடுமையான போட்டியைக் கொடுத்த இளம் வீரர் பிரக்ஞானந்தா, பட்டத்தை தவற விட்ட போதிலும் கூட அனைவரின் பாராட்டுக்களையும், ஆச்சரியங்களையும், அன்பையும் ஒரு சேர வாரிக் கொண்டு விட்டார் பிரக்ஞானந்தா.

தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினையும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்தார் பிரக்ஞானந்தா.



முதல்வரிடம் தான் வாங்கிய வெள்ளிப் பதக்கத்தையும் காட்டி மகிழ்ந்தார் பிரக்ஞானந்தா.  இதைத் தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் பரிசை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து உதவிகள்  செய்யும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று டெல்லி சென்ற பிரக்ஞானந்தா, தனது பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அவரிடம் தான் பெற்ற வெள்ளிப் பதக்கத்தைக் கொடுத்து மகிழ்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி, பிரக்ஞானந்தாவையும், அவரது பெற்றோரையும் பாராட்டிப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து பிரக்ஞானந்தா போட்டுள்ள டிவீட்டில்,  பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன். எனக்கும், எனது பெற்றோருக்கும் நீங்கள் கூறிய ஆதரவு வார்த்தைகளுக்காக நன்றி சார் என்று நெகிழ்ந்துள்ளார் பிரக்ஞானந்தா.