கருணாநிதிக்கு செயலாளராக இருந்தவர்.. இப்போது பேரன் உதயநிதிக்கும் செயலாளராகியுள்ள பிரதீப் யாதவ்!
சென்னை: உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ், துணை முதல்வர் உதயநிதியின் தனி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஒரு தனிப் பெருமை உள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு தலைவர்களுக்கு செயலாளராக இருக்கும் பெருமையை பெற்றுள்ளார் பிரதீப் யாதவ்.
தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் கடந்த 30ம் தேதி இவர் பதிவியேற்றுக் கொண்டார். அதே நாளில், சேலம் இரா. ராஜேந்திரன் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி, கோவி.செழியன் மற்றும் சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு தனி செயலர் யார் என்று பல்வேறு விதாமாக கருத்துக்கள் நிலவி வந்தன. இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிராதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த இவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனி செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான். பிரதீப் யாதவ் மிகச் சிறந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்துள்ளார். அப்போது பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்துள்ளார். கருணாநிதியின் நம்பிக்கையையும், நற்பெயரையும் பெற்றவர். அவர்தான் தற்போது கருணாநிதியின் பேரனான உதயநிதி ஸ்டாலினுக்கு தனிச் செயலாளராக உயர்ந்துள்ளார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்