மூன் வாக் திரைடப்படத்தின் மூலம் மீண்டும் இணையும் பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான்!
சென்னை: 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவா- ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் புதிய படத்திற்கு மூன் வாக் என பெயரிடப்பட்டுள்ளது.
பிரபுதேவா நடிப்பில் கடைசியாக பகீரா படம் வெளியானது. இந்த படத்திற்கு பின்னர் தற்பொழுது விஜய்யின் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவிலும், வட இந்திய சினிமாவிலும் புகழ் பெற்றவர் பிரபுதேவா. தன்னுடைய அசாத்திய நடனத்தால் தனக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் பிடித்தவர். இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
பிரபுதேவா- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேட்ஸ் ஆகிய படங்கள் செம ஹிட் அடித்தது. அத்துடன் அந்த படங்களில் உள்ள பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன.அதன்பின்னர் 1997ல் வெளியான மின்சார கனவு படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். அந்த படமும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இணைந்துள்ளனர்.
இவர்கள் இணையும் படத்திற்கான பெயர் இன்று வெளியிடப்பட்டது. பிஹைண்ட்வட்ஸ் வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் இயக்குகிறார்.அந்த படத்திற்கு மூன் வாக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்படிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் பிரபுதேவா, யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை 2025ம் ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
மூன்வாக் என்பது மைக்கேல் ஜாக்சனின் மிகப் பிரபலமான உலகப் புகழ் பெற்ற நடன வடிவம். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பிரபுதேவா அழைக்கப்படுவதால் மூன்வாக் என்ற டைட்டிலயே அவரது படத்திற்கு வைத்து விட்டார்கள் போல.. அதுவும் பொருத்தமாத்தான் இருக்கு.