எம். எஸ் சுவாமிநாதன் மறைவு.. "அவருக்கு நிகர் அவரே"..  பி .ஆர் பாண்டியன் புகழாரம்!

Su.tha Arivalagan
Sep 28, 2023,04:09 PM IST

சென்னை: உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்தி வெற்றி கண்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு நிகர் அவரே... உலகம் வியந்து பார்க்கும் வகையில் வேளாண் நலன் காத்தவர் என் வேண்டும் என  தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:


இந்திய விவசாயிகளின் விடிவெள்ளி, பசுமை புரட்சியின் நாயகர், பசியின்மையை அகற்ற உணவு உற்பத்தியை பெருக்க பசுமை புரட்சி என்கிற வேளாண் புரட்சியை உருவாக்கியவர். 30 கோடி மக்களுக்கு உணவை உற்பத்தி செய்யும் தகுதி இல்லாத நிலையில் இன்றைக்கு 140 கோடி மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தொலைநோக்கு திட்டமிட்டு உணவு உற்பத்தியில் இந்தியாவில் தன்னிறைவை ஏற்படுத்தி வெற்றி கண்டவர். 




விவசாயிகள் மேம்பாட்டிற்காகவும்,உற்பத்தி செய்யும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கவும், விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கும்,உரிய சந்தை, கடன் வசதி,ஏற்றுமதி இறக்குமதி கொள்கையை உருவாக்குவதற்கும் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட தனது தலைமையிலான  எம் எஸ் சுவாமிநாதன குழு அறிககையை தொலைநோக்கு பார்வையோடு தயாரித்து அளித்தவர்.


அவருக்கு நிகர் அவரே என்று செயல்பட்டு வந்தவர். உலகமே வியந்து பார்க்கிற வகையில் வேளாண் நலன் காக்கும் அறிக்கையை தாக்கல் செய்தவர். மதிப்பிற்குரிய வேளாண் விஞ்ஞானி  எம் எஸ்.சுவாமிநாதன் அவர்கள்  மறைவு இந்திய விவசாயிகளுக்கு மிகப்பெரும் பேரிழப்பாகும். உலக அளவிலான வேளாண் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டிருக்கிற மிகப்பெரும் துயரமாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தார்கள், நன்பர்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் அனைவருக்கும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ்நாடு அரசு அவரது சிறந்த செயல்பாட்டுக்கு மதிப்பளித்து அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசு மரியாதை அளித்து இறுதி சடங்குகள் நடத்த முதலமைச்சர் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.