மீண்டும் ஜப்பானில் நிலநடுக்கம்.. 6.1 ரிக்டர் அளவில்.. பீதியில் உறைந்த மக்கள்..!

Manjula Devi
Apr 04, 2024,10:47 AM IST

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஹென்ஷு  பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.


ஜப்பான், தைவானில் நேற்று  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இது பூமிக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால் தைவானில் ஒரு சில பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இதனால் மக்கள் பீதியில் உறைந்த நிலையில், அடுத்து கடல் அலைகள் மூன்று அடி தூரம் வரை எழுந்து சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் ஜப்பான், தைவானில் பல பகுதிகளுக்கு  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.




இந்த நிலையில் ஜப்பானில் இரண்டாவது நாளாக இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொன்ஷு கிழக்குக் கடற்கரை அருகே உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இந்த நில அதிர்வின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. தற்போது மீண்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வழங்கப்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை.