இந்த நத்தையைப் பாத்திருக்கீங்களா.. டேஞ்சரஸ்.. எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள்!
சென்னை: மழைக்காலத்தில் நம்ம ஊர்களில் திடீரென ஒரு வகை நத்தை வரத் தொடங்கியுள்ளது. இதைப் பலரும் பார்த்திருப்போம்.. ஆனால் இது அபாயகரமான நத்தை என்று பூவுலிகின் நண்பர்கள் அமைப்பு உஷார்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் கூறுகையில், சமீப காலங்களில் மழை தொடங்கிவிட்டாலே Giant African Snail எனப்படும் நத்தையை எங்கும் பார்க்க முடிகிறது. இது ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு அயல் படர் (Alian Invasive species) உயிரினமாகும்.
சமீபகாலங்களில் அதிகமாக தென்னிந்தியாவில் பரவும் இந்த நத்தைகள் விளைநிலங்களில் பயிர்களை அழித்து பெரும் தொந்தரவை விவசாயிகளுக்கு உருவாக்கி வருகின்றன. இது lungwarm எனும் ஒட்டுண்ணியைப் பரப்புவதன் மூலமாக மனிதருக்கு கடுமையான நோய்த்தொற்றையும் உருவாக்கக்கூடியது.
இன்று அதிகரித்த உலகளாவியப் போக்குவரத்து ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு மனித நடவடிக்கைகளால் உலகமுழுதும் ஏராளமான அயல் படர் உயிரினங்கள் வேகமாகப் பரவி வருகின்றன. IPBES எனப்படும் ஐநாவுக்குக் கீழான அமைப்பு சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் 37,000 உயிரினங்கள் மனிதர்களால் புதிய இடங்களுக்குப் பரவியிருப்பதாகவும் அவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் 3,500 உயிரினங்கள் அயல் படர் உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. எதிர்காலத்தில் மனிதகுலத்துக்கும் உயிரிப்பன்மையத்துக்கும் இவை பெரும் ஆபத்தாக இருக்குமென்று அறிக்கை எச்சரிக்கிறது.
சீமைக் கருவேலம், பார்த்தீனியம், ஆப்பிரிக்க திலேப்பி மீன், யூகாலிபிட்டஸ் என நாம் அறிந்தவை மறைந்திருக்கும் ஆபத்தின் சிறுதுளியே என்று அவர் தெரிவித்துள்ளார்.
பூவுலகு அமைப்பு எச்சரித்திருக்கும் இந்த வகை நத்தையானது சமீப காலமாகத்தான் அதிகம் காணப்படுகிறது. மழை வந்து விட்டாலே இந்த நத்தை வந்து விடும். வழக்கமான நத்தையை விட இது சற்று வேகமாக நகருகிறது. மிகப் பெரிதாகவும் இருக்கிறது. வேகமாகவும் இது பரவுகிறது. இந்த வகை நத்தைப் பரவலைத் தடுக்கத் தேவையான ஆய்வுகள், நடவடிக்கைகள் அவசியமாகிறது.