பேனா சின்னத்துக்கு ஏன் அனுமதி?.. "வலையில் சிக்கிக்காதீங்க".. எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள்!!
Apr 29, 2023,12:33 PM IST
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தவர்கள் இப்போது பேனா நினைவுச் சின்னத்திற்கு அனுமதி அளித்திருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச் சூழல்துறை வழங்கியுள்ளது.
இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த அனுமதி குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி. சுந்தரராஜன் கூறுகையில், கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய எத்தனையோ முட்டுக்கட்டைகளை போட்ட அரசு, இன்று கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைக்க வெகுவிரைவாக ஏன் அனுமதி அளிக்கிறது என்கிற சூட்சுமத்தை புரிந்துகொள்ளவேண்டும்.
வேறு என்ன, அரிச்சல்முனை கடலில் 1000 அடியில் “கதத்துடன் அனுமர்” சிலை அமைக்க அனுமதி கேரப்படும். அத்துடன் அது நிற்குமா?, உடன்குடி கடலில் காமராஜருக்கு சிலை, தூத்துக்குடியில் வஉசியின் நினைவாக கப்பலுடன் கூடிய சிலை, கடலூர் கடலில் “பாயும்புலி பண்டார வன்னியனுக்கு” சிலை என தமிழகத்தின் கடற்கரையில் அடுத்த 10-15ஆண்டுகளுக்குள் பலசிலைகள் முளைக்கும்.
கன்னியாக்குமரியில் திருவள்ளுவர் சிலையைவிட உயரமான சிலை பாரத அன்னைக்கு அமைக்கப்படலாம்.
இப்படியே தொடர்ந்தால் என்னவாகும்? எனவே இந்த அரசியல் விளையாட்டை நடத்த ஒன்றிய அரசு தயாராக உள்ளது, நாம்தான் இந்த விசயத்தில் சிக்கிகொள்வதில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். கலைஞருக்கு “சிறப்பான நினைவு சின்னம்” வேண்டும். ஆனால் கடலுக்குள் அமைக்கும் இந்த திட்டத்தை மட்டும் கைவிட கோருகிறோம் முதல்வரே என்று அவர் கூறியுள்ளார்.