"40 நாள் கையெழுத்து போடணும்".. ரஞ்சனா நாச்சியாருக்கு.. நிபந்தனை ஜாமீன் கொடுத்த நீதிபதி!
சென்னை: சென்னையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவர்களை வெளியே பிடித்து இழுத்து சரமாரியாக அடித்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடந்து கொண்ட துணை நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியாருக்கு பூந்தமல்லி கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
சென்னை குன்றத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில், படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் சென்றதைப் பார்த்த ரஞ்சனா நாச்சியார், பஸ்ஸை வழிமறித்து நிறுத்தி டிரைவருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர்களை திட்டி வெளியே இழுத்து விட்டார். ஒரு சிறிய பையனை தலையிலேயே சரமாரியாக அடித்தார். அந்தப் பையன் இத்தனைக்கும் உள்ளே நின்று கொண்டிருந்தவன் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் கண்டக்டரைப் பார்த்து அறிவு கெட்ட நாயே நாயே என்று திரும்பத் திரும்பத் திட்டினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 5 பிரிவுகளின் கீழ் ரஞ்சனா மீது வழக்குப் பதிவு செய்த மாங்காடு போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் பூந்தமல்லி கோர்ட்டில் நீதிபதி ராம்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது ரஞ்சனா சார்பில் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அதில் 2 குழந்தைகளுக்குத் தாய் ரஞ்சனா. தனது பிள்ளைகள் போல நினைத்துத்தான் இப்படி நடந்து கொண்டார், அடித்தார், திட்டினார். அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த நீதிபதி, ஒரு தாய் இப்படித்தான் பிள்ளைகளைத் திட்டுவாரா என்று கேட்டார். பின்னர் 40 நாட்கள் தினசரி காலை, மாலை இரு நேரம் மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.