பொன்னியின் செல்வன் 2 எப்படி இருக்கு?.. ரசிகர்களை வென்றாரா? வீழ்ந்தாரா?

Aadmika
Apr 28, 2023,10:00 AM IST
ரசிகர்கள், திரையுலகினரின் நீண்ட எதிர்பார்ப்பு, காத்திருப்புக்கு பிறகு டைரக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படம் இன்று (ஏப்ரல் 28) உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் 2022 ம் ஆண்டின் உறுதியில் ரிலீஸ் செய்யப்பட்டு, ரூ.500 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. 

படம் எப்படி இருக்கு ?

இதனால் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும், அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு பொன்னியின் செல்வன் நாவலை படிக்காத ரசிகர்களுக்கும், மீதமுள்ள கதையை முழுவதையும் இரண்டாம் பாகத்திலேயே சொல்லி முடித்திருப்பார்கள், எப்படி காட்சி ஆக்கி இருப்பார்கள் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் நாவலை படித்தவர்களுக்கும் ஏற்பட்டது. 

முதல் பாகத்தின் இறுதியில், நந்தினியின் திட்டத்தின் படி இலங்கையில் இருக்கும் அருள்மொழி வர்மனை சிறைபிடித்து அழைத்து வர சோழ படைகள் இலங்கை செல்கிறது. பாண்டிய ஒற்றர்கள் படை, அருண்மொழி வர்மனையும் வந்தியத் தேவனையும் கொல்ல முயற்சி செய்கிறார்கள். நடுக்கடலில் நடக்கும் சண்டையில் பொன்னியின் செல்வனான அருண் மொழி வர்மன் கொல்லப்பட்டதாக சோழ நாட்டிற்கு தகவல் வருவதாக முடித்தார்கள். 



இரண்டாம் பாகத்தின் துவக்கமே ஆதித்ய கரிகாலன், தம்பி அருள்மொழி வர்மனின் மரண செய்தி கேட்டு காஞ்சியில் இருந்து தஞ்சைக்கு வருவது ஆரம்பமாகிறது. முதல் சீனே ஆதித்ய கரிகாலனும், நந்தினியும் கடம்பூர் மாளிகையில் நேருக்கு நேர் சந்தித்து கொள்வது தான். இருவருமே தங்களின் பழைய காதல் நினைவுகளில் மூழ்குகிறார்கள். முதல் 15 நிமிடங்களிலேயே விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் வேற லெவல் நடிப்பில் ரசிகர்களின் மனதை வென்று விட்டார்கள். அதன் பிறகு காட்சிகள் ஒவ்வொன்றாக விரிகின்றன.. திரையை அதிர வைக்கின்றன.

பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களும் சரி படிக்காதவர்களும் சரி, ரசிகர்களை ஏமாற்றாத வகையில் கதையை அழகாக சொல்லி இருக்கிறார் மணிரத்னம். வழக்கம் போல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பங்கை இசையில் நிறைவு செய்திருக்கிறார். ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி பட்டையை கிளப்பி உள்ளார். வந்தியத்தேவன், குந்தவையின் காதல் காட்சிகளின் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. "உயிர் உங்களுடையது தேவி" என த்ரிஷாவை அழகாக பார்க்கும் போது ரசிகர்களாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

விக்ரம் - ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி - சம்யுக்தா, கார்த்தி - த்ரிஷா ஆகியோர் காதல் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். மதுராந்தகனாக வரும் ரகுமான், பெரிய பழுவேட்டரையராக வரும் சரத்குமார் இருவரையும் வஞ்சனை இல்லாமல் வேலை வாங்கி இருக்கிறார் மணிரத்னம். இருவரின் நடிப்பிலும் அவர்களின் அனுபவம் தெரிகிறது. 

ப்ளஸ் என்ன ?

கதாபாத்திரங்களின் நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். ஆர்ட்ஒர்க் அல்டிமேட். ஒவ்வொரு சீனையும் மிக அழகாக காட்சி ஆக்கி இருக்கிறார்கள். ஃபர்ஸ்ட் ஆஃப் கொஞ்சம் மெதுவாக சென்றாலும், செகண்ட் ஆஃப்பில் அதை ஈடு செய்து விட்டார்கள். இரண்டாம் பாகத்திலும் நந்தினியும், குந்தவையும் ஸ்கோர் செய்து விட்டார்கள். 

மைனஸ் என்ன ?

ஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் கொஞ்சம் வரலாற்று உணர்வை தனது இசையில் கொண்டு வர முயற்சி செய்திருக்கலாம். கதையில் வரும் முக்கியமான பாயிண்டுகள் பலவற்றை படத்தில் கொண்டு வராமல் விட்டுள்ளனர். கதையை இன்னும் கொஞ்சம் தெளிவாக, அழுத்தமாக சொல்லி இருக்கலாம். கதை கொஞ்சம் மெதுவாக நகர்வதை போன்ற உணர்வு ஏற்படுகிறது.

மக்கள் கருத்து என்ன ?

படம் சூப்பர். கதாபாத்திரங்களின் நடிப்பு சூப்பர். பொன்னியின் செல்வன் 2 நிச்சயம் பல சாதனைகளை முறியடிக்கும். பல சாதனைகளை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்தத்தில் பொன்னியின் செல்வன், ரசிகர்களின் மனதையும் வென்று விட்டார்.