மீண்டும் அமைச்சராக பதவியேற்ற பொன்முடி...உயர்கல்வி துறையை அளித்த தமிழக அரசு
சென்னை : சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் இன்று தமிழக அமைச்சராக திமுக.,வின் பொன்முடி மீண்டும் பதவியேற்றார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்ட திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பொன்முடி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்த வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து பொன்முடி மீண்டும் அமைச்சராக, தமிழக கவர்னரிடம் அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுத்து விட்டார்.
கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழக கவர்னர் ரவிக்கு சரசாரியாக கேள்விகளை முன் வைத்தது. இந்த வழக்கில் இன்று பதிலளிக்கவும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை அமைச்சராக பதவியேற்க வருமாறு பொன்முடிக்கு கவர்னர் ரவி அழைப்பு விடுத்தார்.
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று கவர்னர் ரவி, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடியிடம் இருந்து பறிக்கப்பட்ட உயர்கல்வித் துறை, அவருக்கு மீண்டும் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த பூங்கொத்தை கவர்னர் வாங்க மறுத்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் பொன்முடியின் பதவியேற்பு விழா முடிந்த சிறிது நேரத்திலேயே முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், அரசியல் சட்டத்தின் பாதுகாவலனாக இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றியதற்காக நன்றி என சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டிருந்தார்.