பொன்முடி பதவிப்பிரமாணம்.. ஆளுநர் ஆர். என். ரவிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.. நாளை வரை  கெடு!

Su.tha Arivalagan
Mar 21, 2024,10:38 PM IST

டெல்லி:  முதலமைச்சர்தான் மாநிலத்தின் தலைவர். அவர்தான்  அரசியல் சாசன சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். அவர் ஒருவரை ஒரு பதவியில் அமர்த்த விரும்புகிறார் என்றால் அதை நிறைவேற்ற வேண்டியதுதான் ஆளுநரின் வேலை. தமிழ்நாடு ஆளுநர் உச்சநீதிமன்றத்துடன் மோதிப் பார்க்க விரும்புகிறாரா என்று உச்சநீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது.


முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர். என். ரவி மறுத்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் ஆட்சேபனையும் தெரிவித்துள்ளது.


தமிழக அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. சொத்து குவிப்பு வழக்கில் இவருக்கும் இவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து அவரது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகள் பறிபோயின. இந்த நிலையில் இந்த தீர்ப்பு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்ததில் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.




இதைத்தொடர்ந்து பொன்முடியின் எம்எல்ஏ பதவி மீண்டும் அவருக்கு கிடைத்தது. அதேபோல அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை கொடுக்க முடிவு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர் ஆர் ஆர். ரவிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த ஆளுநர், தீர்ப்பு மட்டும்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தவிர குற்றவாளி இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை என கூறி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்.


இதை அடுத்து தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள்  பர்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநரின் செயல் குறித்து நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.


தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறுகையில், உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை ஏற்க மறுத்து அரசியல் சாசன சட்டத்தை பின்பற்ற ஆளுநர் மறுத்தால் அரசால் என்ன செய்ய முடியும்?. நாளை வரை ஆளுநருக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும். நாளை வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. நாளைக்குள் பதில் வராவிட்டால் அரசியல் சாசன சட்டப்படி செயல்பட வேண்டும் என்று ஆளுநருக்கு நாங்கள் உத்தரவிட நேரிடும்.


ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலை அளிக்கின்றன. இந்த விஷயத்தில் அவருக்கு எந்த வேலையும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டுடன் அவர் விளையாட விரும்புகிறாரா.. நாளை வரை நாங்கள் பொறுத்திருப்போம். அதற்குப்பின் முடிவு எடுப்போம். நாங்கள் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தை மறுப்பது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணிப்பது என்பது சரியல்ல. இதை அவருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது.


ஒரு நபர் குறித்து நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நாம் விறுப்புவெறுப்புகளைத் தாண்டி, அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றையே பின்பற்ற வேண்டும். அதுதான் நமது வேலை. முதல்வர் ஒருவரை நியமிக்க விரும்பினார் என்றால் ஆளுநர் அதை செய்ய வேண்டும். அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் . முதலமைச்சர்தான் ஒரு மாநிலத்தின் அரசியல் சாசன சட்டப்படியிலான தலைவர் ஆவார். அவர் சொல்வதை ஆளுநர் கேட்க வேண்டும் என்று கடுமையான உத்தரவிட்டனர்.


உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவிட்டிருப்பதால் உடனடியாக பொன்முடிக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.