டெல்லி சென்ற ஆளுநர்.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்.. இப்போதைக்கு பொன்முடி அமைச்சராக வாய்ப்பில்லை!
சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மீண்டும் அமைச்சராக பொன்முடிக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ள நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் வந்துள்ளது.
ஆளுநர் ரவி, தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு 16ம் தேதிதான் சென்னை திரும்பவுள்ளதாக தெரிகிறது. மறுபக்கம் நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒரு வேளை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் ஆளுநர் சென்னை திரும்பினால் பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பிருக்கிறது.
ஆனால ஆளுநர் திரும்புவதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். அப்படி வந்து விட்டால், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பது சிக்கலாகும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகுதான் அவரால் அமைச்சராகப் பதவியேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பொன்முடி அமைச்சராக பதவியேற்பது உடனடியாக நடக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொன்முடியின் எம்எல்ஏ, மற்றும் அமைச்சர் பதவி தானாக தகுதி நீக்கம் ஆனது. ஆனால் சுப்ரீம்கோர்ட் இந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதால், எம்எல்ஏ பதவி அவருக்கு மீண்டும் கிடைத்து விட்டது. ஆனால் அமைச்சர் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையே ஏற்கனவே ஏகப்பட்ட முட்டல் மோதல்கள் நிலவி வரும் நிலையில் அத்தனை சீக்கிரம் பொன்முடி பதவியேற்பு நடக்கும் என்று தெரியவில்லை.