பொங்கல் 2025 .. பொங்கல் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால்.. என்ன பலன் கிடைக்கும் ?
சென்னை : தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாக இருப்பது பொங்கல் பண்டிகையாகும். புதிய பானையில் பச்சரிசி, வெல்லம், நெய், பால் சேர்த்து பொங்கி வரும் போது, பொங்கலோ...பொங்கல் என ஒன்று சேர்ந்து உற்சாகமாக ஓசையிட்டு கொண்டாடுவது வழக்கம்.
பொங்கல் வைப்பதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது பொங்கல் பொங்குவது தான். இது எந்த திசையில் பொங்குகிறதோ அதை பொறுத்து வரும் ஆண்டில் நம்முடைய குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் அமையும் என முன்னோர்கள் பலன் கணித்து சொல்லுவது உண்டு. எந்த திசையில் பொங்கல் பொங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விறகு அடுப்பு அல்லது கேஸ் அடுப்பு என எதில் பொங்கல் வைத்தாலும், சிலர் பொங்கல் பொங்கினால் அடுப்பு அணைந்து விடும் என நினைத்து பொங்கல் பொங்குவதற்கு முன்பாக அடுப்பை நெருப்பை குறைத்து விட்டு, அரிசியை சேர்த்து விடுவார்கள். ஆனால் பொங்கலை பொங்க விட வேண்டும். பொங்கல் அனைத்து பக்கங்களிலும் பரவலாக பொங்குவது மிக மிக நல்லது. சில சமயங்களில் குறிப்பிட்ட சில திசையில் மட்டும் பொங்கல் பொங்கும். அப்படி எந்த திசையில் பொங்கினால் நம்முடைய குடும்பத்தில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கிழக்கு :
கிழக்கு திசையில் பொங்கல் பொங்கி வழிந்தால் வீடு, மனை, வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வீடு கட்டுவதற்கான யோகம், ஆடை, ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதற்கான யோகம் அதிகரிக்கும். ஏதாவது சொத்து வாங்க திட்டமிட்டிருந்தாலும் அந்த முயற்சிகள் கை கூடும்.
மேற்கு :
மேற்கு திசையில் பொங்கல் பொங்கினால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும், திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். . வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுவதால் சுப செலவுகளும் ஏற்படும்.
வடக்கு :
வடக்கு திசையில் பொங்கல் பொங்கினால் பணவரவு அதிகரிக்கும். பதவி உயர்வு, வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பது, பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைப்பது, வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைப்பது. கொடுத்த கடன் கைக்கு வருவது போன்ற பலன்கள் ஏற்படும்.
தெற்கு திசை :
தெற்கு திசையில் பொங்கல் பொங்கினால் வீட்டில் இருப்பவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சுப காரியங்கள் தாமதப்படும். மன கவலை, குழப்பம், சோர்வு ஆகியவை ஏற்படும். அதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்