பொங்கல் ஸ்பெஷல்: 13, 14 தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும்!
Jan 12, 2023,09:11 PM IST
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் 3 நாட்களுக்கு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது. 14ம் தேதி போகி கொண்டாடப்படும். 15ம் தேதி தைப் பொங்கல் விழா கொண்டாடப்படும். 16ம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும்.
பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:
ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் இரவு நேர கடைசி ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. வழக்கமாக பீக் ஹவர் நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இரவு 8 மணி வரை இயக்கப்படும். அந்த சேவையானது இந்த இரு நாட்களுக்கும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
ஜனவரி 18ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை நேர சேவை 5 மணிக்குப் பதில் 4 மணிக்கே தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.