BSP தலைவர் ஆர்ம்ஸ்டிராங் படுகொலை.. கட்சித் தலைவர்கள் கண்டனம்.. கதறி அழுத பா. ரஞ்சித்
Jul 05, 2024,10:27 PM IST
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்டிராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆர்ம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஓடி வந்த இயக்குநர் பா. ரஞ்சித் கதறி அழுதார்.
தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்டிராங் இன்று இரவு அடையாளம் தெரியாத கும்பலால் அவரது வீட்டுக்கு அருகே படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஆர்ம்ஸ்டிராங் படுகொலை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசியக் கட்சி ஒன்றின் மாநிலத் தலைவர் இந்த அளவுக்கு கொடூரமாக கொலைசெய்யப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
ஆர்ம்ஸ்டிராங் படுகொலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்டிராங், சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.
திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி.
மாயாவதி அவர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் விடுத்துள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத்தலைவரும் ஆகச்சிறந்த பவுத்த சிந்தனையாளருமான தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை தருகிறது. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
தமிழக காவல்துறை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கொலையாளிகளையும் கொலையின் பின்ணணியையும் உடனே கண்டறிய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கதறி அழுத இயக்குநர் பா. ரஞ்சித்
முன்னதாக ஆர்ம்ஸ்டிராங் படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவர் முதலில் கொண்டு செல்லப்பட்ட அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரது கட்சியினர், குடும்பத்தினர், ஆதரவாளர்கள் விரைந்தனர். இயக்குநர் பா. ரஞ்சித்தும் அதில் ஒருவர். ஆர்ம்ஸ்டிராங் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் கிடைத்ததும் பா. ரஞ்சித் கதறி அழுதார். அருகில் இருந்தவரின் தோளில் சாய்ந்து கொண்டு அவர் கேவிக் கேவி அழுத காட்சி உருக்கமாக இருந்தது.
அப்பல்லோ மருத்துவமனை முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் குவிந்திருந்ததால் அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அனைவருமே கதறி அழுதபடி காணப்பட்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.