கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து.. எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை கண்டனம்

Su.tha Arivalagan
Nov 13, 2024,05:43 PM IST

சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கை: சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.


ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன. அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.


கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.




கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.


முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில், கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி அவர்கள் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது வேதனை அளிக்கக் கூடியது. தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.


மருத்துவர்கள் அனைத்து நோயாளிகளையும் பாகுபாடற்ற மனநிலையிலேயே சிகிச்சை அளிக்கிறார்கள். நோயாளியின் உறவினர்கள் தங்கள் உறவினர்கள் நோயோடு போராடுகிறார்கள் என்ற வேதனை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அது மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது.


மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் நோயாளிகளின் உறவினருக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும். ஆனால் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை  நிலவுகிறது என்பது வேதனை. 


மருத்துவர்  இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும்  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார். அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன். மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை.


அரசு மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு


இதற்கிடையே, டாக்டர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அவசர சிகிச்சைப் பணிகள் தவிர வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாமல் பணிப் புறக்கணிப்பு செய்வதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்