பைக்குக்கு ஆப்பு.. விரைவில் யூடியூப் சானலுக்கும் ஷட்டவுன்.. சிக்கலில் டிடிஎப் வாசன்!

Su.tha Arivalagan
Nov 20, 2023,07:59 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: அதிக ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்திய டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனல்  முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.


கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய  நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில்  பைக் வீலிங் சாகசம் செய்து விபத்தை ஏற்படுத்தியவர் டிடிஎஃப் வாசன். இந்த விபத்தில் இவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டு  உயிர் தப்பினார். 


இதையடுத்து அவர்  கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார். அவரது டூவீலர் வாகன லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு விட்டது. அவரால் பைக் ஓட்ட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.




இந்த நிலையில் தற்போது டிடிஎப் வாசனின் யூடியூப் சானலை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மூல வழக்கு விசாரணையில் உள்ள காஞ்சிபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் போலீஸார் மனு செய்துள்ளனர். கோர்ட் அனுமதி கிடைத்தவுடன் வாசனின் சானலை முடக்குவது தொடர்பாக யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்படும் என்று தெரிகிறது.