அனுமதி இன்றி கொடிக் கம்பங்கள் வைத்த.. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைத்ததற்காக கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யட்டுள்ளது.
நடிகர் விஜய் பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து அறிக்கையையும் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தல் இல்லங்க... 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் தான் எனது இலக்கு. அதுவரைக்கும் கமிட்டான படங்களை நடித்து கொடுத்து விட்டு வருகிறேன் என்று கூறியிருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்று இருந்தது. தற்போது அதில் இருந்த எழுத்துப் பிழை நீக்கப்பட்டு கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதற்கிடையே, கள்ளிக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை சட்டசபைத் தொகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டன. காவல் துறையின் அனுமதி பெறாமல் கொடுக்கம்பங்கள் வைக்கப்பட்டதால், தமிழக வெற்றி கழக மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இன்றி வைக்கப்பட்ட கொடி கம்பங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.