"50% கமிஷன் அரசு" என பேச்சு.. பிரியங்கா காந்தி மீது ம.பி. போலீஸ் வழக்கு

Aadmika
Aug 13, 2023,11:18 AM IST

டெல்லி :  மத்தியப் பிரதேச அரசு 50 சதவீத கமிஷன் வாங்கும் அரசு என்று குற்றம் சாட்டிப் பேசிய காங்கிரஸ் இளம் தலைவர் பிரியங்கா காந்தி மீது மத்தியப் பிரதேச காவல்துறை 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.


பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது குஜராத்தை பாஜக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கில், பல ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு, அதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவியே பறிக்கப்பட்டது. நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது தான் சுப்ரீம் கோர்ட் உதவியுடன் இழந்த தனது எம்பி., பதவியை திரும்பப் பெற்று, லோக்சபா செயல்பாடுகளில் கலந்து கொள்ள துவங்கி உள்ளார் ராகுல் காந்தி.


இந்நிலையில் மத்திய பிரதேச பாஜக சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி, கமல்நாத், அருண் யாதவ் ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலியான கடிதம் ஒன்றை வைத்து ஆளும் பாஜக அரசு கான்டிராக்டர்களிடம் 50 சதவீதம் கமிஷன் வாங்கி விட்டதாக தவறான தகவல் பரப்புவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பாஜக அரசு 50 சதவீதம் கமிஷன் வாங்குவதாக வெளியான தகவல் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக  அளித்த புகாரை ஏற்று பிரியங்கா காந்தி, கமல்நாத், அருண் யாதவ் ஆகியோர் மீது இந்தூர் போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரில் போபாலை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


போபாலில் உள்ள கிரைம் பிராஞ்சில் அமைச்சர் விஸ்வாஸ் சாரங் மற்றும் பிற பாஜக தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் மீது தொடர்ந்து ஏகப்பட்ட புகார் மனுக்கள் போலீசில் குவிந்து வருகிறது. ஆனால் ஆளும் பாஜக அரசு மீது கமல்நாத் முன் வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை பாஜக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதே சமயம், கமல் அளித்த கடிதம் பொய்யானது என்று மட்டும் பாஜக தலைவர் விடி சர்மா தெரிவித்துள்ளார். 


மக்களை தவறாக வழிநடத்திய இந்த பொய்யான கடிதம் பற்றி கமல்நாத், பிரியங்கா காந்தி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என பாஜக கேட்டுள்ளது.