இந்தியாவைப் போலவே.. போலந்து அரசியலையும் உலுக்கும் "பெகாசஸ்".. சிக்கலில் தலைவர்கள்.. அதிரடி விசாரணை!

Su.tha Arivalagan
Feb 20, 2024,07:28 PM IST

வார்சா:  போலந்து நாட்டில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசு, தன்னுடைய விமர்சகர்களையும், அரசியல் எதிரிகளையும் ஒடுக்க பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தியது குறித்த சர்ச்சை போலந்து நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து கடந்த ஆட்சியில் இருந்த மூத்த தலைவர்களிடம் எம்.பிக்கள் குழு விசாரணை நடத்தவுள்ளது.


இந்தியாவில் இப்படித்தான் பாஜக அரசு மீது ஒரு சர்ச்சை வெடித்தது. இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பை சாப்ட்வேர் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் தற்போது போலந்திலும் இந்த விவகாரம் வெடித்துள்ளது.


போலந்து நாட்டில் சட்டம் மற்றும் நீதி (பிராவோ இ ஸ்பிராவிட்லிவோஸ்க்) என்ற கட்சி முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தது. இது தீவிர வலது சாரி கட்சியாகும். ஜாரோஸ்லோ காக்ஸியான்ஸ்கி தலைமையிலான இந்தக் கட்சியின் ஆட்சி கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.




இந்தக் கட்சி ஆட்சியின்போதுதான் பெகாசஸ் உளவு சாப்ட்வேரைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.  அந்தப் புகாரை அப்போது சட்டம் மற்றும் நீதிக் கட்சி திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் பெகாசஸ் பயன்பாடு குறித்து கடும் சர்ச்சை எழுந்த நிலையில்தான் ஆட்சியை இழந்தது அந்தக் கட்சி. இந்த நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள், பெகாசஸ் சர்ச்சை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். எம்.பிக்கள் கொண்ட குழு விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ளது.


இந்தக் குழுவினர் ஜாரோஸ்லோ காக்ஸியான்ஸ்கி, முன்னாள் பிரதமர் பீட்டா ஸிட்லோ, முன்னாள் சட்ட அமைச்சர் பிக்னியூ சியோபோரா, முன்னாள் உள்துறை அமைச்சர் மாரியஸ் கமின்ஸ்கி ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளனர்.


இதுகுறித்து தற்போதைய அரசின் சட்டத்துறை அமைச்சர் ஆடம் போட்னார் கூறுகையில், பெகாசஸ் உளவுப் மென்பொருளைப் பயன்படுத்தி மிகப் பெரிய அளவில் ஹேக்கிங் நடந்துள்ளது குறித்து அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்படும் என்றார்.


போலந்து கூட்டணி அரசில் சமீபத்தில் இணைந்த ஒப்பந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மகதலீனா ஸ்ரோகா (இவர் முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவார்) இந்த விசாரணைக் கமிட்டியின் தலைவராக இருக்கிறார். விசாரணை குறித்து அவர் கூறுகையில், போலந்து பாதுகாப்புத்துறையை மிகப் பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தியுள்ளது கடந்த அரசு. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. சட்டம் - நீதிக் கட்சி பொய்களைத் தவிர வேறு எதையுமே சொல்லவில்லை. முதலில் பெகாசஸைப் பயன்படுத்தவே இல்லை என்று மறுத்து வந்தனர். ஆனால் பெகாசஸ் பயன்பாடு மிகப் பெரிய அளவில் இருந்தது அதிர்ச்சி அளிக்கும் உண்மையாகும் என்றார் அவர்.


ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் புயல்


கடந்த வருடமே போலந்து நாட்டில் பெகாசஸ் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் குறி வைக்கப்படுவதாகவும், ஐரோப்பிய நாடாளுமன்றத்திலேயே பிரச்சினை வெடித்தது என்பது நினைவிருக்கலாம்.


6.2 மில்லியன் டாலர் கொடுத்து இந்த உளவுப் பொருளை இஸ்ரேலிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் - நீதி அரசு வாங்கியதாகவும் ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம் சாட்டியிருந்தது.  இதற்கான பணத்தையும் கூட, குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்துதான் அரசு முறைகேடாக எடுத்துள்ளதும் தெரிய வந்தது.


பிரச்சினை பெரிதானதைத் தொடர்ந்து தாங்கள் பெகாசஸ் வாங்கியதை முந்தைய அரசு ஒத்துக் கொண்டது. ஆனால் குற்றத் தடுப்பு நோக்கத்திற்காகவே அதை வாங்கியதாக அரசு உப்புச் சப்பில்லாத காரணத்தைக் கூறியது.  இந்த நிலையில்தான் தற்போது அந்த கட்சியின் தலைவர்களுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது, விசாரணை வளையத்திற்குள் அவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.


யார் இந்த ஜாரோஸ்லோ காக்ஸியான்ஸ்கி?




சட்டம் நீதிக் கட்சியின் தலைவரான ஜாரோஸ்லோ காக்ஸியான்ஸ்கி, மறைந்த தனது தம்பி லெக் காக்ஸியான்க்ஸியுடன் இணைந்து கடந்த 2001ம் ஆண்டு இந்தக் கட்சியைத் தொடங்கினார். 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் 2019ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் இந்தக் கட்சியே மீண்டும் வென்றது.


ஆரம்பத்தில் இந்தக் கட்சியின் ஆட்சி நன்றாகவே இருந்தது. ஆனால் போகப் போக சர்வாதிகாரியாக மாறத் தொடங்கி விட்டார் ஜாரோஸ்லோ காக்ஸியான்ஸ்கி. கோர்ட், தேர்தல் ஆணையம்,  காவல்துறை, சட்ட அமைப்புகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு அவற்றை நீர்த்துப் போக செய்து விட்டார் ஜாரோஸ்லோ காக்ஸியான்ஸ்கி. டிவி உள்பட எதிலுமே தனக்கும், தனது ஆட்சிக்கும் எதிராக எதுவும் வராதது போல செய்து விட்டார். இதனால் ஆட்சிக்கு எதிராக மக்களிடையே கடும் அதிருப்தி எழ ஆரம்பித்தது.


எதிர்க்கட்சிகளையும், தன்னை எதிர்த்துப் பேசுவோரையும், எதிரிகளையும் ஒடுக்க இவர்கள் பயன்படுத்திய ஆயுதம்தான் இந்த பெகாசஸ். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் இந்தக் கட்சி தோல்வியைத் தழுவி ஆட்சியையும் பறி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.