"எங்க கிட்ட யாருமே பேசலை".. தேமுதிக.. "எங்களை 2 பேரும் கூப்பிடறாங்க".. இது பாமக!

Su.tha Arivalagan
Feb 23, 2024,09:31 PM IST

சென்னை:  கூட்டணிக்காக தங்களுடன் யாருமே பேசவில்லை என்று தேமுதிக தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், தங்களை அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுமே கூப்பிட்டுள்ளதாக பாமக கூறியுள்ளது.


லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தெளிவாக உள்ளது. எல்லா வேலைகளையும் ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் சில நாட்களில் தொகுதிப் பங்கீட்டை முடித்து விடும் நிலையும் உள்ளது. திமுக சார்பில் பரப்புரைக் கூட்டங்களையும் கூட தொடங்கி விட்டனர். அங்கு குழப்பம் ஏதும் இல்லை இதுவரை.


மறுபக்கம் அதிமுக, பாஜக கூட்டணிகளில் இன்னும் ஒரு தெளிவு பிறக்கவில்லை. பாமக, தேமுதிகவின் நிலைப்பாட்டை வைத்துத்தான் இந்த கூட்டணிகள் இறுதி வடிவம் பெரும் நிலை காணப்படுகிறது. இரு கட்சிகளும் யாருடன் கூட்டணி வைக்கப் போகின்றன என்று தெரியவில்லை.


வலுவான கூட்டணிக்கு முயற்சி




அதிமுகவும் சரி, பாஜகவும் சரி, வலுவான கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டுகின்றன. உப்புக்குச் சப்பு கூட்டணி அமைத்தால் வேலைக்காகாது என்பதை இரு கட்சிகளுமே உணர்ந்துள்ளன. எனவே வலுவான கூட்டணியை அமைக்கும் நோக்கில் இரு கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றன.


அதிமுகவைப் பொறுத்தவரை பாமகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வந்து விட தீவிரம் காட்டுகிறது. அதேசமயம், தங்களுடன் உடன்பட்டு வந்தால் தேமுதிகவுக்கும் கூட்டணியில் இடம் உண்டு என்ற அளவில் அவர்களை டீல் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. காரணம், பாமக அளவுக்கு தேமுதிக வலுவாக இல்லை என்பதும் முன்பை விட இன்னும் பலவீனமாக அது உள்ளதாகவும் அதிமுக கருதுகிறது.


தேமுதிகவின் டிமான்ட்




மேலும் தேமுதிக வைக்கும் ராஜ்யசபா சீட், 14 லோக்சபா சீட்டெல்லாம் ஒத்து வராது என்றும் அதிமுக கருதுகிறது. எங்களால் இத்தனை சீட்தான் தர முடியும். மற்றவற்றை, சட்டசபை தேர்தலின்போது பார்த்துக் கொள்ளலாம், சொல்லுங்க, கூட்டணியை இறுதி செய்து விடலாம் என்று அதிமுக தரப்பு, தேமுதிகவுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளதாக சொல்கிறார்கள்.


இந்த நிலையில் தங்களுடன் யாரும் பேசவில்லை. மறைமுகமாகவும் பேசவில்லை, நேரடியாகவும் நாங்கள் பேசவில்லை. எல்லாம் விரைவில் சுபமாக முடியும். முடிந்தவுடன் அறிவிப்போம் என்று தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.


இருவரும் கூப்பிடறாங்களே.. பாமகவின் தர்மசங்கடம்!




மறுபக்கம் பாமக அவைத் தலைவர் ஜி.கே.மணி வேறு விதமான தகவலைக் கூறியுள்ளார். அதாவது அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தங்களது கூட்டணிக்கு வருமாறு பாமகவை அழைப்பதாக கூறியுள்ளார் மணி. இப்போதைக்கு கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. விரைவில் இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் முடிவெடுத்து இறுதி செய்வார் என்று மணி கூறியுள்ளார்.


இந்த இரு கட்சிகளும் யாருடன் கூட்டணி அமைக்கின்றன என்பதைப் பொறுத்தே அதிமுக, பாஜக கூட்டணிகள் இறுதியாகும் என்று தெரிகிறது. எது எப்படியோ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் 3 அணிகள் அமைவது உறுதியாகி விட்டது. இவை தவிர நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிடும். மக்கள் நீதி மய்யம் அனேகமாக திமுக கூட்டணியில் இணைந்து விடும்.