அதிமுகவுக்கு ஸாரி.. பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறது பாமக.. டாக்டர் ராமதாஸ் திடீர் முடிவு!
விழுப்புரம்: பாஜகவுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்கவுள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எங்களிடம் அறிவித்துள்ளார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் ஒரு முக்கிய சம்பவம் இன்று நடந்துள்ளது. அதாவது பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் இணைய இன்று முடிவெடுத்துள்ளது. பாஜக அணியில் இணையும் ஒரு முக்கிய, பெரிய கட்சியாக பாமக உருவெடுத்துள்ளது.
இன்று திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாஸின் பண்ணை இல்லத்தில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்ற முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிப்ரவரியில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவெடுக்க டாக்டர் அய்யாவுக்கு அதிகாரம் வழங்கினோம். இன்று அந்த முடிவை அய்யா அறிவித்தார். அதன்படி லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறோம்.
எந்தெந்த தொகுதி, யார் யார் வேட்பாளர் என்பதை நாளை அல்லது நாளை மறு நாள் டாக்டர் அய்யா அறிவிப்பார். சேலத்தில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு வந்தால் எங்களது தலைவர் சென்று கலந்து கொள்வார் என்றார்.
இதன் மூலம் பாஜக கூட்டணியில் ஒரு தெளிவு பிறந்து விட்டது. அடுத்து அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா அல்லது பாஜக பக்கம் வருமா என்ற எதிர்பார்ப்பு திரும்பியுள்ளது.