தமிழ்நாட்டுக்கு எதிரானது திமுக கூட்டணி.. கன்னியாகுமரியில் ஆவேசம் காட்டிய பிரதமர் மோடி

Meenakshi
Mar 15, 2024,07:51 PM IST

கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும், கலாச்சாரத்திற்கும் திமுக எதிரானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், மத்திய பாஜக வுடன் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், எப்படியாவது தமிழகத்தில் பாஜக கொடியை ஊன்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பாஜகவினர் பாடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்ணாமலை தேர்தலுக்காக இரவு பகல் பராது வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பிரதமர் மோடியும் அடிக்கடி தமிழகத்திற்கு விசிட் அடித்து வருகிறார்.



நாடாளுமன்ற தேர்தலில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் பறந்து பறந்து பிச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இந்தாண்டில் மட்டும் இத்துடன் 5வது முறையாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர், கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். 


பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல் . முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்கினறனர். விஜயதாரணி, சசிகலா புஷ்பா உள்ளிட்ட பெண் பிரமுகர்கள் கூடி பெரிய ரோஜாப் பூ மாலையை பிரதமருக்கு அணிவித்தனர்.


அதன் பின்னர் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில், திமுக தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், எதிர்காலத்துக்கும் எதிரான கட்சி. அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டைக்கு முன்பாக நான் தமிழ்நாட்கு வந்தேன். பல்வேறு கோவில்களுக்கும் போனேன். ஆனால் அயோத்தி ராமர் கோவில் விழாவை கோவிலில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு தடுத்தது. இதை சுப்ரீம் கோர்ட்டே கண்டித்தது. 




நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கவும் கூட திமுக விரும்பவில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வழி வகுத்தது பாஜகதான். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியால் தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக்க முடியாது. இங்கு ஊழல்தான் மலிந்துள்ளது. 


தமிழ்நாட்டில் இந்த முறை பாஜக வரலாறு காணாத வெற்றியைப் பெறும் திமுக காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் அராஜகத்தை தவிடு பொடியாக்கும் என்றார் பிரதமர் மோடி.


இந்த கூட்டம் முடிந்ததும் மதியம் பிரதமர் கார் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு செல்கிறார்.