தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி சாமி கும்பிட்டார்.. அரிச்சல் முனையிலும் வழிபாடு!
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் உள்ள புகழ் பெற்ற கோதண்டராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்று வழிபாடு செய்தார். அதேபோல அரிச்சல் முனை கடற்கரைக்கும் அவர் சென்று மலர் தூவி வழிபட்டார்.
தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி இன்று தனது 3வது நாள் பயணத்தைத் தொடங்கினார். காலையில் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, தனுஷ்கோடிக்குச் சென்றார். அங்குள்ள புகழ் பெற்ற கோதண்டராமர் கோவிலுக்குச் சென்ற அவர் அங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்தார். இங்கு வில்லேந்திய கோலத்தில் ராமர் சிலை அமைக்கப்பட்டிருக்கும். தற்போது அயோத்தியில் உள்ள ராமர் சிலையும் கூட இதே போலத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு அங்கிருந்து அவர் அரிச்சல்முனை கடற்பகுதிக்குச் சென்றார். இந்தப் பகுதியிலிருந்துதான் கற்களால் ஆன பாலத்தை இலங்கைக்கு வானரப் படை கட்டியதாக கூறப்படுகிறது. இதுதான் ராமர் பாலம் என்று அழைக்கப்படுகிறது
அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்த பிரதமர் மோடி அங்கு மணலில் மலர்களைத் தூவி வணங்கினார். இந்த மலர் அஞ்சலியில் தாமரை மலர்களும் இடம் பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள அசோக ஸ்தூபிக்கும் மலர் தூவி வணங்கினார் பிரதமர் மோடி. அதன் பின்னர் டெலஸ்கோப் மூலமாக அரிச்சல் முனையிலிருந்து கடலைப் பார்த்து ரசித்தார் பிரதமர் மோடி.