"யானை யானை காஸிரங்கா யானை".. அதிகாலையில் கலக்கிய பிரதமர் மோடி.. யானை மீது உற்சாக சவாரி!
காஸிரங்கா, அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலம் காஸிரங்கா தேசிய புலிகள் சரணாலயம் மற்றும் பூங்காவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு யானை மீது அமர்ந்து சவாரி செய்து மகிழ்ந்தார்.
யானை சவாரி மட்டுமல்லாமல் ஜீப் சபாரியிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது காஸிரங்கா பூங்கா. இந்த பூங்காவுக்கு முதல் முறையாக வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. இன்று காலை அவர் மிஹமுக் பகுதியில் யானை சவாரி செய்தார். அதைத் தொடர்ந்து அதே பகுதியில் ஜீப் சபாரியிலும் பிரதமர் ஈடுபட்டார்.
பிரதமர் மோடியுடன், பூங்கா இயக்குநர் சோனாலி கோஷ் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உடன் சென்றனர்.
முன்னதாக காஸிலங்காவுக்கு நேற்று மாலை பிரதமர் வருகை தந்தார். 2 நாள் அஸ்ஸாம் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் காஸிரங்காவுக்கு வந்தார். இன்று பிற்பகல் ஜோர்ஹாட்டில் 125 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அஹோம் ஜெனரல் லச்சித் பர்புக்கான் சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார்.
அதன் பின்னர் மெலங் மெதேலி போத்தார் என்ற இடத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ரூ. 18,000 கோடி மதிப்பிலான திட்டங்கலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைப்பார்.
இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டடத்திலும் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசவுள்ளார்.