ராமேஸ்வரம் கடலில்.. தீர்த்தம் எடுக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.. 2 நாள் பயணமாக வருகிறார்!
சென்னை: கேலோ இந்தியா போட்டியைத் தொடங்கி வைக்க தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, 20ம் தேதி ராமேஸ்வரம் சென்று அங்கு புனித தீர்த்தத்தை எடுத்துச் செல்லவுள்ளார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 19ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அழைத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி தற்போது போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக ஜனவரி 19ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார். 19ம் தேதி பிற்பகல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த விளையாட்டு விழாவின் தொடக்க விழா நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்டு போட்டியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் பிரதமர் மோடி அன்று இரவு அங்கு தங்கி ஓய்வடெுக்கிறார். அதன் பின்னர் அடுத்த நாள் அவர் ஸ்ரீரங்கம் புறப்பட்டுச் செல்கிறார். அங்குள்ள ரங்கநாத சுவாமி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுகிறார். அதை முடித்துக் கொண்ட பிறகு மதுரை திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். ராமநாதசுவாமி கோவிலுக்கு விஜயம் செய்து சாமி கும்பிடுகிறார். பின்னர் புனித நீராடுகிறார்.
அதன் பின்னர் அங்கிருந்து புனித நீரை சேகரித்துக் கொள்வார். அந்த புனித நீரை ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பிரதமர் எடுத்துச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் பயணத்தை முடித்துக் கொண்ட பிறகு தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார் பிரதமர் மோடி.
அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவில் கலந்து கொள்ளவுள்ள பிரதமர் மோடி 11 நாள் விரதம் உள்ளிட்ட பூஜைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் நாட்டின் முக்கிய கோவில்களுக்கும் அவர் தொடர்ந்து சென்று வருகிறார். நேற்று கூட குருவாயூர் கோவிலுக்கு அவர் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.