தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. கோவையில் பொதுக்கூட்டம்.. மதுரையில் தொழில்முனைவோருடன் சந்திப்பு

Manjula Devi
Feb 23, 2024,06:42 PM IST

மதுரை: இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. கோவை, மதுரை, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.


2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் சில காலமே உள்ளது.  தேதி அறிவிப்புக்காக அத்தனை கட்சிகளும் காத்துள்ளன. மறுபக்கம் முக்கியக் கட்சிகள் பிரச்சாரத்தையே தொடங்கி விட்டன. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


பல்வேறுஅரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை செய்து வரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் தனது நடை பயணத்தை நிறைவு செய்யும் கட்டத்தை நெருங்கியுள்ளார். அவரது நடை பயண நிறைவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளவுள்ளார்.


பல்லடம் நடைபயண நிறைவு விழா




பிப்ரவரி 27ஆம் தேதி  திருவனந்தபுரத்தில் இருந்து  தனி விமான மூலம் மதியம் 1:20 மணிக்கு புறப்பட்டு, கோவை பல்லடத்தில் நடைபெற உள்ள பாஜக கூட்டத்தில்  மதியம்  2.30 மணி அளவில் கலந்து கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பாஜக பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்தை வந்தடைகிறார். 


மதுரையில் ரோடுஷோ




பின்னர் சாலை மார்க்கமாக மாலை 5 மணி அளவில் மதுரை வீரபாஞ்சன் டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் தேசிய தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் தென் மாவட்ட தொழில் அதிபர்களுடன் இந்திய அளவில் உள்ள பெரும் தொழில் அதிபர்களான மகேந்திரா, பஜாஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். டிவிஎஸ் நிறுவனத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கலந்துரையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


28ம் தேதி தூத்துக்குடி பயணம்




இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு பசுமலை தாஜ் ஓட்டலில் தங்குகிறார். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்கிறார். அங்கு காலை 9:45 மணி அளவில் பாம்பன் தூக்கு பாலம் அர்ப்பணிப்பு குலசேகர பட்டினம் ஏவுகணை தளத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். 


மாலையில் நெல்லையில் பொதுக்கூட்டம்




பின்னர் திருநெல்வேலிக்கு ஹெலிகாப்டர் மூலம் காலை 11:15 மணிக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முடிந்து விட்டு, மதியம் 12:20 மணியளவில் புறப்படுகிறார். பின்னர் திருநெல்வேலியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 1.30 மணி அளவில் திருவனந்தபுரம் சென்றடைகிறார்.


பிரதமர் வருகையை தடபுடலாக மாற்றும் வகையில் பாஜகவினர் சிறப்பு ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். அதேபோல பிரதமர் வருகையையொட்டி அவர் வரும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.