மெரீனா கடற்கரையைக் கலக்கப் போகும் விமானப்படை சாகசம்.. 6ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி
சென்னை: இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் சாகச நிகழ்ச்சியை காண பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆறாம் தேதி சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய விமானப்படை முதன் முதலில் கடந்த 1932 ஆம் ஆண்டு அக்டோபர் எட்டாம் தேதி நிறுவப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் எட்டாம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக டெல்லியில் உள்ள விமானப்படை தளங்களில் சாகச நிகழ்ச்சிகள், அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இந்திய விமானப்படை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருவது வழக்கம். இந்த வருடம் அக்டோபர் எட்டாம் தேதி இந்திய விமானப்படையின் 92 வது விமானப்படை தினம் வருகிறது.
இந்த 92வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சிகள் மற்றும் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை விமானப்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள விமானப்படை பயிற்சி மையத்திலும் அணிவகுப்பு பயிற்சிகளையும் செய்து வருகின்றனர்.
இதில் பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், உள்ளிட்ட பல்வேறு வகை விமானங்களும் இந்த அணிவகுப்பில் ஈடுபட உள்ளன. அதே வேளையில் இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்திய விமானப்படை சார்பில் நடத்தப்படும் விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்