போர்ட்பிளேரில் அதி நவீன ஏர்போர்ட்.. திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Jul 18, 2023,10:16 AM IST
போர்ட்பிளேர்: அந்தமான் நிக்கோபார் தீவுகளின், போர்ட் பிளேர் நகரில் அதி நவீனமாக மேம்படுத்தப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
போர்ட்பிளேரில் உள்ள வீர் சவர்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம் அதி நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தால் போர்ட்பிளேருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சுற்றுலாவும் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நவீன முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போர்ட்பிளேரின் தென் பகுதியில் வீர் சவர்கர் விமான நிலையம் அமைந்துள்ளது. 2002ம் ஆண்டு முதல் இது வீர் சவர்கர் விமான நிலையம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. வீர சவர்கர் அந்தமானில் உள்ள செல்லுர் சிறையில் 11 ஆண்டு காலம் சிறைப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதன் நினைவாக இந்த விமான நிலையத்துக்கு வீர் சவர்கர் பெயர் சூட்டப்பட்டது.
மிகவும் குறுகிய ரன்வேயுடன் கூடியதாக இந்த விமான நிலையம் இருந்தது. போக்குவரத்து அதிகரித்ததால் பெரிய விமானங்களையும் கையாளும் வகையில் ரூ. 700 கோடி செலவில் இந்த விமான நிலையம் நவீனமாக்கும் பணிகள் தொடங்கின. தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து மிகவும் நவீனமான முனையமாக இது மாறியுள்ளது.
போர்ட்பிளேர் விமான நிலையத்தில் தற்போது பல்வேறு புதியவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரன் வே நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் சவுகரியமாக பயணிகள் வந்து செல்ல முடியும். நெரிசல் நீங்கி விசாலமான முனையமாக இது மாறியுள்ளது. ஒரு வருடத்துக்கு 50 லட்சம் பயணிகளை இனி கையாள முடியும். அனைத்துப் பணிகளும் கடந்த மாதம் முடிவடைந்து இன்று விமான முனையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், விசாகப்பட்டனம் உள்ளிட்ட நகரங்களுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது