சென்னை டூ கோவை.. தமிழ்நாட்டுக்குள் முதல் வந்தே பாரத் ரயில்.. மோடி தொடங்கி வைக்கிறார்
சென்னை: சென்னை - மைசூரு இடையிலான வந்தேபாரத் ரயில் சேவை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ள நிலையில் தற்போது சென்னைக்கும் கோவைக்கும் இடையே இன்னொரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவின் அதி வேக ரயில் சேவையாக அறியப்படுவது வந்தே பாரத் ரயில். இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு இடையே இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. முதல் ரயில் 2019ம் ஆண்டு தலைநகர் டெல்லிக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசிக்கும் இடையே அறிமுகமானது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஒரு வந்தேபாரத் ரயில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதுதான் தமிழ்நாட்டுக்கான முதல் வந்தே பாரத் ரயிலாகும். தற்போது 2வது ரயிலை மத்திய ரயில்வே துறை வழங்கியுள்ளது. அது கோவைக்கும் - சென்னைக்கும் இடையிலான ரயிலாகும்.
தமிழ்நாட்டுக்கு உள்ளே அறிமுகமாகும் முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில்ச சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி புதியரயிலை தொடங்கி வைப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதே நிகழ்ச்சியில் செங்கோட்டை - தாம்பரம் இடையிலான வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.