வாரணாசி தொகுதியில்.. பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல்.. 3வது முறையாக போட்டி!

Manjula Devi
May 14, 2024,06:41 PM IST
லக்னோ: வாரணாசி தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது முறையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. ஐந்தாவது கட்ட தேர்தல்  பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, ஒடிஷா, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், ஆகிய 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் வரும் மே 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் (மே 14 ) நிறைவடைகிறது.




உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் களம் காண்கிறார். அதே தொகுதியில்  உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது நினைவிருக்கலாம்.

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அத்தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருடன் சென்று அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.





வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கங்கை நதிக்கரையில் உள்ள தசாஷ்வமேத் படி துறையில் பிரார்த்தனை செய்தார். அங்கு மந்திரங்கள் முழங்க கங்கா ஆரத்தியும் எடுத்தார். இதனை முடித்துவிட்டு காசி காலபைரவர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு செய்தார்.

மோடியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சிகள் தலைவர்கள்,  
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டிலிருந்து ஜி.கே.வாசன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் வந்தனர். இருப்பினும் வேட்பு மனுவை வழங்கும்போது நான்கு பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்பதால் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே பிரதமருடன் உடன் இருந்தனர்.