"காங்கிரஸ் 40 சீட் கூட வாங்காது".. என்ன பிரதமர் இப்படி சொல்லிட்டாரு.. உண்மை நிலவரம்தான் என்ன?

Aadmika
Feb 07, 2024,09:10 PM IST

டில்லி : இன்னும் லோக்சபா தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை அதற்குள் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை மிகக் கடுமையாக அதுவும் பார்லிமென்ட்டில் வைத்தே விமர்சித்து வருகிறார் பிரதமர் மோடி. இன்று அவர் பேசிய பேச்சு காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று லோக்சபாவில் பிரதமர் மோடி பேசும் போது, "நீங்க கடைசி வரைக்கும் எதிர்க்கட்சி தான்" என்றார். இன்று ராஜ்யசபாவில் பேசும் போது, "எப்படி இருந்த கட்சி இப்போ இப்படி ஆகிடுச்சு. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40-50 சீட்களையாச்சும் வாங்க நான் பிரார்த்தனை செய்கிறேன். நேருவின் கருணையாலும், கார்கேவின் ஆசிர்வாதத்தாலும் தான் அந்த கட்சி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது" என மிக கடுமையாக பேசி உள்ளார் பிரதமர் மோடி.


545 இடங்களைக் கொண்ட லோக்சபாவில் நாங்கள் 400 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என்று அதி உறுதியாக நேற்று பிரதமர் மோடி பேசியிருந்தார். இன்று ராஜ்யசபாவில் பேசும்போது, காங்கிரசிற்கு வெறும் 40-50 சீட் தான் கிடைக்கும் என்று பிரதமர் சொல்கிறார் என்றால் அப்படி ஒரு மோசமான நிலையிலா காங்கிரஸ் உள்ளது? பிரதான எதிர்க்கட்சி, பாரம்பரிய கட்சி, தேசிய கட்சியான காங்கிரசை பிரதமரே இப்படி பேசுகிறார் என்றால் காங்கிரசின் உண்மையான நிலை என்ன? 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசிற்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் ?


2019ல் 52 இடங்களில் வென்ற காங்கிரஸ்




2019 ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களின் வெற்றி பெற்றது. ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. 10 சதவீதம் ஓட்டுக்கள் குறைவாக பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரசால் பெற முடியவில்லை.


2014 ம் ஆண்டு லோக்சபா தேர்தலை விடவும் 2019 ல் காங்கிரஸ் குறைவான ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. கடந்த 10 ஆணடுகளில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரிய அளவில் அழுத்தமாக வெற்றியை பதிவு செய்யவில்லை.


பரம்பரிய கட்சியாக இருந்த போதிலும் காங்கிரசால் இந்த 10 ஆண்டுகளில் பாஜக.,வை வீழ்த்தும் அளவிற்கு பலம் பெறவோ, தனித்து போட்டி என்று கெஜ்ரிவால், மம்தா பானர்ஜியை போல் தைரியமாக அறிவிக்க முடியவில்லை. தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது. பாஜக.,வை வலிமையான தலைவர் ஒருவர் காங்கிரசில் இல்லாதது இதற்கு மிக முக்கியமான காரணமாகும். 


பலமில்லாத கூட்டணிகள்




பாஜக.,வை வீழ்த்த வேண்டும் 2019 ல் பிராந்திய கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜக - காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று மகாகத்பந்தன் என்ற கூட்டணியை உருவாக்கின. ஆனால் கூட்டணி அமைத்த சில மாதங்களிலேயே அது காணாமல் போனது. அதற்கு பிறகு அது என்ன ஆனது என இதுவரை தெரியவில்லை. காங்கிரஸ் வேண்டாம் என கூறிய கட்சிகளுடன் இணைந்து தான் இந்த முறை "இந்தியா" என்ற கூட்டணியை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜக.,வை எதிர்த்ததால் இந்த முறை தேர்தலில் பாஜக.,விற்கு கடுமையான போட்டி இருக்கும், பாஜக., விற்கு எதிராக எந்த மாநிலத்தில் யாரெல்லாம் வேட்பாளர்களாக போட்டியிட போகிறார்கள் என மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், இந்தியா கூட்டணி துவங்கியது முதலே முட்டலும் மோதலும் இருந்து கொண்டு தான் இருந்தன.


இந்தியா கூட்டணியில் இருக்கும் 32 கட்சிகளிலும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய முடியவில்லை. இதனால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னே நிதிஷ்குமார், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஒவ்வொருவராக கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டார்கள். இதில் நிதிஷ்குமார் பாஜக., கூட்டணியிலேயே போய் இணைந்து விட்டார். இந்த கூட்டணியில் இருந்து அடுத்து யார் வெளியேற போகிறார்கள் என்ற நிலை தான் உள்ளது. இருந்தாலும் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் காங்கிரசால் கூட இதுவரை தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய முடியவில்லை. 


மக்களின் மனதில் இடம் பெற முடியாமல் போவது ஏன்




மக்களை கவர வேண்டும் என்று இல்லாமல், பாஜக.,விற்கு எதிராக செயல்பட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி நடத்திய பாத யாத்திரை போன்றவைகளும் பெரிதாக எடுப்படவில்லை. காங்கிரசின் உறுதியற்ற நிலை, மக்களின் மனதில் இடம்பிடிக்கும் அளவிற்கு பெரிதாக எதுவும் செய்யாமல் இருப்பது, வலிமையான தலைவர்கள் இல்லாதது ஆகியன காங்கிரசிற்கு பலவீனமாக அமைந்து விட்டன. 


காங்கிரசின் இந்த மோசமான நிலையை வைத்து தான் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெற போகும் சீட்டுகளின் எண்ணிக்கையை பிரதமர் மோடி கணித்து சொல்லி இருக்கிறார் போல. தேர்தல் நெருங்கும் சமயத்திலாவது காங்கிரஸ் விழித்துக் கொண்டு, மக்களை தங்கள் பக்கம் இழுக்க ஏதாவது செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


பிரஷாந்த் கிஷோர் சமீபத்தில் இப்படிக் கூறியிருந்தார்.. "காங்கிரஸ் கட்சி இன்னும் பாஜகவை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவரை அந்தக் கட்சியால் மத்தியில் வெல்ல முடியாது. தனது உத்திகளை காங்கிரஸ் மொத்தாக மாற்றியாக வேண்டும். பிரதமர் மோடியையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை.. நாளை மோடிக்குப் பின் வருபவர், அவரை விட மிகவும் கடுமையானவராக இருக்கக் கூடும். அதை எப்படி காங்கிரஸ் சமாளிக்கும் என்று தெரியவில்லை" என்று பிகே சொல்லியிருந்தார். பிரதமர் மோடியின் பேச்சும் இதை உறுதிப்படுத்துவது போலவே உள்ளது.


பிரதமரின் இந்த சவாலை எப்படி சமாளிக்கப் போகிறது காங்கிரஸ்?