திமுகவினரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்வோம்.. மக்களிடம் ஒப்படைப்போம்.. பிரதமர் மோடி பரபர பேச்சு!

Su.tha Arivalagan
Mar 04, 2024,07:34 PM IST

சென்னை: திமுக குடும்பத்தினர் மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை பறிமுதல் செய்வோம். அதை நாட்டு மக்களிடம் ஒப்படைப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வந்தார். சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


பிரதமர் மோடி பேசத் தொடங்கும்போது இது எனது குடும்பம் என்று திரும்பத் திரும்பக் கூறினார். இதைக் கேட்டு தொண்டர்களும் அதேபோல இது மோடியின் குடும்பம் என்று கோஷமிட்டனர். அதன் பிறகு பிரதமர் பேசத் தொடங்கினார். பிரதமரின் பேச்சிலிருந்து சில பகுதிகள்:


சென்னை வந்தாலே எனர்ஜி கிடைக்கிறது:  நான் ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதும், மக்கள் காட்டும் அன்பால் புதிய சக்தியைப் பெறுகிறேன். முழுக்க முழுக்க உயிரோட்டத்துடன் கூடிய நகரம் சென்னை. இந்த நகரில் இருப்பது மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. திறமை, வர்த்தகம், பாரம்பரியத்தின் இல்லமாக சென்னை திகழ்கிறது. இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றும் மிகப் பெரிய நோக்கத்தில் சென்னை மக்களும் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.




உங்கள் அன்பைப் பார்த்து பலருக்கு பொறாமை:  நீங்கள் என் மீது காட்டும் அன்பு புதிதில்லை. ஆனால் சமீப காலமாக நான் எப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் நீங்கள் காட்டும் அன்பைப் பார்த்து சிலர் அப்செட் ஆகிறார்கள். பாஜகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளருவதைப் பார்த்து அவர்களுக்குப் பிரச்சினையாகிறது.


"விக்சித் பாரத்" என்ற முழக்கத்தோடு, நான் எடுத்துக் கொண்டுள்ள இன்னொரு தீர்மானத்தையும் நான் எடுத்துள்ளேன். அதுதான் "விக்சித் தமிழ்நாடு". இந்தியாவை விரைவில் மூன்றாவது பெரும் பொருளாதார சக்தியாக உருவாக்குவோம்.  சென்னை போல பிற நகரங்களையும் மேம்பட்டதாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது.


நெருக்கடியான நேரத்தில் வெள்ளம் பாதித்த சமயத்தில், திமுகவினர் மீடியாக்களை நிர்வகிப்பதில்தான் கவனம் செலுத்தினர்.  வெள்ள நிர்வாகத்தில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.


திமுகவினரை விட மாட்டேன்: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது. மத்திய அரசு மக்களுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது திமுகவினருக்குப் பிடிக்கவில்லை. அதில் அவர்களுக்குப் பிரச்சினை உள்ளது. அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..  மோடி உங்களை விட மாட்டார். தமிழ்நாட்டு மக்களிடமிருந்து நீங்கள் கொள்ளையடித்த பணத்தை நாங்கள் பறிமுதல் செய்வோம். அவர்களிடமிருந்து மீட்கப்படும் பணத்தை மக்களிடமே கொடுப்போம். இது மோடியின் உத்தரவாதம்.


குடும்பம்தான் அவர்களுக்கு முதலில்: உங்களுக்கெல்லாம் தெரியும், திமுக, காங்கிரஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு குடும்பம்தான் முதலில். மோடிக்கு தேசம்தான் முதலில். அதனால் இந்தியா கூட்டணிக் கட்சிகள் என் மீது அவதூறு பேசி வருகிறார்கள், அவமானப்படுத்தி வருகிறார்கள். மோடிக்கு குடும்பம் இல்லை என்று அவதூறாகப் பேசுகிறார்கள்.  அப்படியானால் ஊழல் செய்வதற்கும், மக்களிடம் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கும் குடும்பத்தை லைசென்சாக அவர்கள் கருதுகிறார்களா. எனது குடும்பத்தை மீண்டும் மீண்டும் அவர்கள் அவமதித்து வருகிறார்கள். 




குடும்பத்திலிருந்து நான் வெளியேறியது ஏன்?: நான் எனது குடும்பத்தை விட்டு வந்தேன், வீட்டை விட்டு வந்தேன்.. எதற்காக.. .எனது நாட்டுக்காக வந்தேன். அதனால்தான் வெளியேறினேன். நாடுதான் எனது குடும்பம். 140 கோடி பேரும் எனது குடும்பம். எனது நாடு எனது குடும்பம். அதனால்தான் இன்று நாடு  சொல்கிறது, நாங்கள் மோடியின் குடும்பம் என்று.


இன்று மின்சார பாதுகாப்புக்காக நாங்கள் ஓய்வின்றி பாடுபட்டு வருகிறோம். கல்பாக்கத்தில், மிகப் பெரிய முன்னேற்றம் ஒன்று இப்போது நடந்து வருகிறது. நாட்டின் முதல் சுயேச்சை அதி வேக ஈனுலை சோதனை ரியாக்டர் புதிய சாதனையை செய்துள்ளது. இது இந்த அரசின் முக்கிய சாதனை என்று பிரதமர் மோடி கூறினார்.