மணிப்பூர் வன்முறை: "பெரும் வேதனை.. கொடூரர்களுக்கு மன்னிப்பே கிடையாது".. மோடி ஆவேசம்
டெல்லி: மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணமாக நடத்திச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார். இந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட யாரும் சும்மா விடப்பட மாட்டார்கள், அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பெரும் வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. பலர் கொல்லப்பட்டுள்ளனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இதுவரை கருத்தே தெரிவிக்காமல் இருந்து வந்தார். வெளிப்படையாக அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் இப்படி பெருத்த மெளனம் காக்கிறார் என்று விமர்சித்து வந்தனர். ஆனாலும் பிரதமர் மோடி இதுகுறித்து ரியாக்ஷன் காட்டாமல் இருந்து வந்தார். அதேசமயம் சமீபத்தில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று ஒரு வீடியோ வெளியாகி மனித குலத்தையே பதற வைத்து விட்டது. இரண்டு பெண்களை ஒரு பெரும் கும்பல் நிர்வாணப்படுத்தியும், மிகவும் குரூரமாக ஆபாசமாக, வெறித்தனமாக நடந்து கொண்ட செயல் பார்த்தவர்களைப் பதற வைத்து விட்டது. இந்த அளவுக்கு மோசமான வன்முறை மணிப்பூரில் அரங்கேறுகிறதே.. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லையா.. போலீஸ் இல்லையா.. ராணுவம் இல்லையா என்று பலரும் குமுறல் வெளியிட்டு வந்தனர். பிரதமர் இனியும் அமைதி காக்கக் கூடாது. மணிப்பூரில் அமைதி திரும்பச் செய்ய மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் குமுறல் வெளியிட்டிருந்தனர்.
சமூக வலைதளங்களில் மக்கள் மிகவும் கொந்தளிப்புடன் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று பகிரங்கமாக தனது கோபத்தை வெளிப்படுத்தினார். நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் மணிப்பூர் குரூரம் தொடர்பாக தான் மிகவும் கோபத்துடனும், வலியுடனும் இருப்பதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி கூறுகையில், எனது இதயம் வலியிலும், வேதனையிலும், கோபத்திலும் நிரம்பியிருக்கிறது. மணிப்பூர் சம்பவம் நாகரீகமடைந்த சமுதாயத்திற்கு மிகப் பெரிய அவமானம். அனைத்து மாநிலங்களிலும் பெண்களைப் பாதுகாக்க முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ராஜஸ்தானில் நடந்தாலும் சரி, சட்டிஸ்கரில் நடந்தாலும் சரி, மணிப்பூரில் நடந்தாலும் சரி அல்லது நாட்டின் எந்த மூலையிலும் நடந்தாலும் சரி.. அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்று பட்டு நிற்க வேண்டும்.
தவறு செய்தவர்களை மன்னிக்க மாட்டோம், அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவர்கள் சும்மா விடப்படக் கூடாது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
பிரதமரே வெளிப்படையாக மணிப்பூர் குறித்து கோபத்துடன் பேசியிருப்பதால் இனி அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசானது சற்று தீவிரமாக செயல்பட்டு கலவரத்தையும், வன்முறையையும் கட்டுக்குள் கொண்டு வர ஏதாவது செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.