இனி ஒரு போதும் காங்கிரஸால் ஜெயிக்கவே முடியாது.. எப்போதும் எதிர்க்கட்சிதான்.. பிரதமர் மோடி ஆவேசம்

Su.tha Arivalagan
Jul 02, 2024,07:59 PM IST
டெல்லி: குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்குப் பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் இன்று பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலத்த கோஷமும், முழக்கமும் இட்டபடி இருந்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் பிரதமர் தொடர்ந்து பேசினார்.

மணிப்பூர் விவகாரத்தில் நீதி வேண்டும் என்று கோரியும், எதிர்க்கட்சிகள் பொய்  சொன்னதாக பிரதமர் மோடி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டபடி இருந்தனர். இந்த முழக்கம் காரணமாக சில நிமிடம் பிரதமர் தனது பேச்சை நிறுத்த நேரிட்டது. இருப்பினும் பின்னர் அவர் தொடர்ந்து  பேசினார்.

பிரதமர் மோடியின் பேச்சிலிருந்து:



இன்றும் நேற்றும் எம்.பிக்கள் குடியரசுத் தலைவர் உரை மீதான தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர். முதல் முறை எம்.பியான பலரும் இந்தத் தீர்மானத்தின் மீது பேச வேண்டும் என்று நான் விரும்பினேன். 

சிலர் தேர்தல் சமயத்தில் பொய்களைப் பரப்பினர். அப்படி பரப்பியும் கூட அவர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். அவர்களது துயரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தலில் மக்கள் எங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் மிகப் பெரிய தீர்மானத்துடன், மக்களின் ஆசிர்வாதத்தை வேண்டி எனது அரசு மக்களிடம் சென்றது. விக்சித் பாரத் தீர்மானத்தின் மீதான ஆசிர்வாதத்தை மக்களிடம் நாங்கள் கோரினோம். இந்தத் தேர்தலில்  மக்களும், நாடும் எந்த அளவுக்கு முதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை நாம் அறிய முடிந்தது.

நாங்கள் வளர்ச்சிக்காக பணியாற்றினோம். யாரையும் தாஜா செய்ய வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்படவில்லை. சப் சாத் சப் விகாஸ் என்ற முழக்கத்துடன் அந்த ஒற்றை நோக்கத்துடன் எனது அரசு முன்னேறிச் செல்கிறது.

இந்தியாவை இன்று உலகம் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது அனைத்து முடிவுகளும், இந்தியாதான் முதலில் என்பதை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படுகின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் நமது அரசின் செயல்பாடுகளை, சாதனைகளை மக்கள் சீர்தூக்கிப் பார்த்து வாக்களித்து எங்களை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்.  ஏழைகளை உயர்த்தும் விதத்தைப் பார்த்து வாக்களித்துள்ளனர்.

2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் திட்டத்தை அடைவதற்காக ற்காக நாங்கள் 24 மணி நேரமும் உழைப்போம். 2014 தேர்தலுக்கு முன்பு ஊழல்கள் நிறைந்த ஆட்சி நடந்து வந்தது. 2014ல் எங்களுக்கு மக்கள் ஆட்சியமைக்க வாய்ப்பளித்தனர். அன்று முதல் வளர்ச்சி தொடங்கியது.




இந்தத் தேர்தலானது எதிர்க்கட்சிகளுக்கு 3வது முறையாக கிடைத்த பெரும் தோல்வியாகும். ஆனால் அவர்கள் எங்களைத் தோற்கடித்து விட்டதாக பேசுகிறார்கள். இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சி வரிசையில் அமர மக்கள் அளித்த தீர்ப்பாகும். இந்த முறை அவர்களால் 99 இடங்களை வெல்ல முடிந்திருக்கிறது. ஒரு மாணவன் 99 மதிப்பெண் எடுத்தால் அது சிறப்பாகும். ஆனால் 100க்கு 99 எடுத்தால்தான் அது சிறப்பு. ஆனால் இவர்கள் 543க்கு 99ஐ எடுத்துள்ளனர். 

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த 99ம் கூட அவர்களால் கிடைத்தது அல்ல. கூட்டணிக் கட்சிகளால் கிடைத்தவையே இவை. இதனால்தான் நான் காங்கிரஸை எப்போதுமே ஒட்டுண்ணி கட்சி என்று கூறுகிறேன்.  காங்கிரஸ் கட்சியால் தனித்து வெல்லவே முடியாது. எதிர் வரும் தேர்தல்களிலும் காங்கிரஸால் வெல்ல முடியாது. 2029 தேர்தலிலும் கூட காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரும்.

இந்த முறை கேரளாவில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது பாஜக. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் வென்றோம். மத்தியப் பிரதேசத்தில் வென்றோம். சட்டிஸ்கரில் வென்றோம். லோக்சபா தேர்தலோடு நான்கு மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. அதிலும் நாங்களே வென்றோம்.

நான் முன்பே கூறியது போல எங்களது 3வது ஆட்சியில் 3 மடங்கு வேகத்துடன் நாங்கள் பணியாற்றுவோம். எங்களது செயல்பாடுகளும் 3 மடங்கு அதிகமாகவே இருக்கும். மும்மடங்கு முடிவை நாங்கள் மக்களுக்கு அளிப்போம்.

கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் வளர்ச்சியை நாங்கள் அதிகரித்துள்ளோம். நவீன இந்தியாவை உருவாக்கும் வேலைகளில் நாங்கள் தீவிரம் காட்டுவோம். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தை 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம். அடுத்து 3வது பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றப் போகிறோம்.