தேசிய ஜனநாயக கூட்டணியில்.. அதிமுக இணைவது மகிழ்ச்சி.. பிரதமர் நரேந்திர மோடி..!
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறி யாரால் கட்சி தோற்றது என்ன காரசாரமான விவாதங்கள் எழுப்பியது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது.
இதனையடுத்து இனி பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக நிர்வாகிகளும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது அதிமுகவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் 26 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்க்ஷாவை சந்தித்தார்.இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, நான் கூட்டணி குறித்து பேசவில்லை. முழுக்க முழுக்க மக்களுடைய பிரச்சினைகளாக தான் வந்திருக்கிறோம். தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கிறது என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதேபோல் கே.பி முனுசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளும் இந்த சந்திப்பில் இடம்பெற்றனர்.
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ள நிலையில் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அமித்ஷா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் மாநில தலைவராக அண்ணாமலைக்கு பதிலாக நைனார் நாகேந்திரனிடம் மட்டுமே வேட்பு மனு பெறப்பட்டு போட்டியின்றி தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்க ஐடிசி கிராண்ட் ஹோட்டலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் சென்றனர். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. மௌனம் காத்தே வந்தார். பின்னர் அமித்ஷா, அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக நிர்வாகிகள், ஆகியோர் கைகோர்த்து புகைப்படம் எடுத்து போஸ் கொடுத்தனர். இதன் மூலம் அதிமுக பாஜக இடையான கூட்டணி உறுதியாகி விட்டதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பதற்காக மீண்டும் அதிமுக பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு போன்ற வெளியிட்டுள்ளார்.
அதில், தேசிய ஜனநாயக கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி. மாமனிதர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தும் ஒரு அரசை நாம் உறுதி செய்வோம். வலுவாக இணைவோம்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.