"சிங்கம்" படத்தைப் போட்டு சிம்பாலிக்காக கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி!
Aug 10, 2023,10:50 AM IST
டெல்லி: இன்று உலக சிங்கம் தினம்.. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி போட்டுள்ள டிவீட் பலருக்கும் பலவிதமான மெசேஜ் கொடுப்பதாக அமைந்துள்ளதாக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் 2வது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சந்தித்துள்ளார் பிரதமர் மோடி. 2018ம் ஆண்டு முதல் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவர் சந்தித்தார். அதில் வெற்றி பெற்றார். இப்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 2வது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சந்தித்துள்ளார். இதிலும் பாஜக அரசு வெல்லும், காரணம், அதற்கு லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால்.
நேற்று ராகுல் காந்தி பேசினார். அவரது பேச்சில் வழக்கம் போல அனல் பறந்தது. பிரதமரையும், பாஜகவையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் ராகுல் காந்தி. அவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் ஆட்சேபனையும் எதிர்ப்பும் தெரிவித்ததால் அமளி துமளியாகவே இருந்தது.
மாலைக்கு மேல் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராகுல் காந்திக்குப் பதிலடி தரும் வகையில் பாஜக அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். வட கிழக்கையும், இந்தியாவின் இதர பகுதிகளையும் இணைத்தவர் பிரதமர் மோடி என்று அவர் பேசினார்.
இந்த நிலையில் இன்று கிளைமேக்ஸ் வருகிறது. . அதாவது பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணியளவில் விவாதம் மீதான பதிலுரையை நிகழ்த்தவுள்ளார். அதைக் கேட்க நாடே காத்திருக்கிறது. அவரது உரைக்குப் பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
இப்படிப்பட்ட பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டுள்ள ஒரு டிவீட்டுக்கு நிறம் கொடுத்து பாஜகவினரால் சிலாகிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டுள்ள ட்வீட் "சிங்கம்" தொடர்பானது.
அவர் போட்டுள்ள டிவீட்டில், இன்று உலக சிங்கம் தினம் கொண்டாடப்படுகிறது. நமது இதயங்களில் தனது பலத்தாலும், கம்பீரத்தாலும் எப்போதும் சிங்கங்கள் ஆட்சி செலுத்துகின்றன. ஆசியாட்டிக் சிங்கங்களின் தாயகமாக இந்தியா விளங்குவது பெருமைக்குரியது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சிங்கங்களின் வாழிடங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன். தொடர்ந்து நாம் அவற்றைப் பாதுகாத்து வருவோம். நமது தலைமுறையினரும் அதைச் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
சாதாரண ட்வீட்தான்.. ஆனால் யாருக்கோ கொடுக்கப்பட்ட மெசேஜாக இதைப் பார்த்து பாஜகவினர் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.