அம்பேத்கரை எப்படியெல்லாம் காங்கிரஸ் அவமதித்தது?.. பட்டியலிட்ட பிரதமர் நரேந்திர மோடி!
டில்லி : டாக்டர் அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். இதனால் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இது தொடர்பாக நீண்டதொரு விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று மக்களவை விவாதத்தின் போது பதிலளித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, சமீப காலமாக டாக்டர்.அம்பேத்கர் பற்றி பேசுவதை எதிர்க்கட்சிகள் பேஷனாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர் பெயரை சொல்வதற்கு பதில், இறைவனின் நாமத்தை சொன்னால் அவர்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும் என்று பேசினார். இதனால் அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொதிப்படைந்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். அதோடு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் மிக நீண்ட பதிவு ஒன்றையும் அவர் போட்டுள்ளார். அதில் காங்கிரஸ் அம்பேத்கர் விவகாரத்தில் செய்த தவறுகளையும் அவர் பட்டியல் இட்டுள்ளார். அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் நடந்து கொண்டது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு இதோ....
"பல வருடங்களாக செய்த தவறுகளை பொய்களால் மூடி மறைக்கலாம், குறிப்பாக டாக்டர் அம்பேத்கரை அவமதித்ததை மறைக்க முடியும் என காங்கிரஸ் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களை அவமானப்படுத்தவும் ஒரு குடும்ப கட்சியின் ஆட்சியில் எப்படி எல்லாவிதங்களிலும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட்டனர் என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
டாக்டர் அம்பேத்கர் பெயரை சொல்லி காங்கிரஸ் செய்த பாவங்கள்:
- அவரை ஒருமுறை அல்ல இரண்டு முறை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது.
- பண்டிட் நேரு, அம்பேத்கருக்கு எதிராக பிரசாரம் செய்து, அவருக்கு அவமரியாதை செய்தார்.
- அம்பேத்கருக்கு பாரத ரத்னா மறுக்கப்பட்டது.
- பார்லிமென்ட்டின் மத்திய அரங்கில் அம்பேத்கரை கெளரவிக்கும் விதமாக அவரது உருவப்படத்தை வைக்க மறுத்தது.
- காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது எஸ்சி, எஸ்டி சமூகங்களுக்கு எதிராக மிக மோசமான படுகொலைகள் நடந்தன என்பதை அவர்களால் மறுக்க முடியாது.
- ஆட்சியில் இருந்த போதெல்லாம் எஸ்சி, எஸ்டி சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை.
பார்லிமென்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, அம்பேத்கரை அவமதித்த வரலாற்றை காங்கிரஸ் இருட்டடிப்பு செய்ய முயன்றதை தான் வெளிப்படுத்தினார். அவர்கள் எஸ்சி, எஸ்டி சமூகத்தினரை புறக்கணித்ததை தான் சொன்னார். அமித்ஷா முன்வைத்த உண்மைகளால் காங்கிரஸ் திகைத்து போய் உள்ளது. அதனால் தான் அவர்கள் தற்போது நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக மக்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும். நாம் என்னவாக இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியதற்கு அம்பேத்கரே உதாரணம்.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வைகளை நிறைவேற்ற எங்கள் அரசு அயராது உழைத்துள்ளது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து அகற்றியது, எஸ்சி எஸ்டி சட்டத்தை வலுப்படுத்தியது, தூய்மை இந்தியா, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், ஜூவாலா யோஜனா போன்ற பாஜக அரசின் எந்த துறை சார்ந்த திட்டமாக இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையவை. ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானவையாக இருந்து வருகிறது.
பஞ்சதீர்த்தம் எனப்படும் அம்பேத்கரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய ஐந்து முக்கிய இடங்களை மேம்படுத்தும் பணிகளில் எங்கள் அரசு ஈடுபட்டுள்ளது. 10 ஆண்டுகளாக சைத்ய பூமி நில விவகாரம் முடங்கி உள்ளது. அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மட்டுமல்ல, அங்கு சென்று நான் பிரார்த்தனையும் செய்து விட்டு வந்துள்ளேன்.
அம்பேத்கர் கடைசியாக வாழ்ந்த டில்லியில் உள்ள 26, அலிபுர் சாலையை முன்னேற்றி உள்ளோம். லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டையும் அரசு கையகப்படுத்தி உள்ளது. டாக்டர் அம்பேத்கர் விஷயத்தில் எங்களின் மரியாதை எப்போதும் முழுமையாக இருந்துள்ளது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்