இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க.. மாஸ்கோ புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!

Manjula Devi
Jul 08, 2024,11:40 AM IST

டெல்லி:   இரண்டு நாள் பயணமாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு இன்று புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு நடைபெற உள்ள இந்தியா- ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினையும் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய -ரஷ்யா இடையேயான உச்சி மாநாடு ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினும் பங்கேற்றார் என்பது நினைவிருக்கலாம்.




இந்த நிலையில் இந்தியா- ரஷ்யா இடையேயான உச்சி மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசி இருதரப்பு உறவையும் வலுப்படுத்த இருக்கிறார். அப்போது இந்திய ரஷ்யா இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ரஷ்யா-  உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றுள்ளார். மேலும் 3வது முறையாக பிரதமராகியுள்ள மோடி, அதன் பின்னர் முதல் முறையாக மேற்கொள்ளும் ரஷ்யப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய- ரஷ்யா உச்சி மாநாட்டை முடித்துவிட்டு, ஜூலை 9ம் தேதி ஆஸ்திரியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து பேசுகிறார்.பின்னர் அங்கிருந்து ஜூலை 10ஆம் தேதி இந்தியா திரும்புகிறார் பிரதமர் நரேந்திர மோடி.


3வது முறையாக பிரதமரான பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்குச் சென்றிருந்தார் பிரதமர் மோடி. தற்போது 2வது உலக பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.