காசி இனி கங்கைக்கு மட்டுமல்ல.. கிரிக்கெட்டும்தான் பேமஸ்... சூப்பராக உருவாகும் ஸ்டேடியம்!

Su.tha Arivalagan
Sep 23, 2023,05:46 PM IST

வாரணாசி:  காசி (வாரணாசி) என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அங்கு பாயும் கங்கை நதியும், சாதுக்களும்தான்.. ஆனால் இனி கிரிக்கெட்டும் நினைவுக்கு வரும். பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாகவுள்ளது.


ரூ. 330 கோடி செலவில் வாரணாசியில் கட்டப்படவுள்ள அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வாரணாசியில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்காக ரூ. 121 கோடி செலவில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அரசு இந்த நிலத்தை வாங்கியுள்ளது. கட்டுமானப் பணிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும்.  கிட்டத்தட்ட 30,000 பேர் வரை அமரும் வகையில் இந்த ஸ்டேடியம் அமையவுள்ளது 


வாரணாசியின் ரஜதலாப் பகுதியில், ரிங் ரோடு அருகே இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் வரவுள்ளது. 2025ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் கட்டுமானப் பணிகள் முடிந்து ஸ்டேடியம் தயாராகி விடும்.  உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமையவுள்ள 3வது சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் இது. ஏற்கனவே கான்பூர் மற்றும் லக்னோவில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


சிவ பெருமானின் அடையாளங்கள்


இந்த ஸ்டேடியம் சிவபெருமானின் அடையாளங்கள் பலவற்றைத்  தாங்கி உருவாகவுள்ளது. அதாவது ஸ்டேடியத்தின் நுழைவாயில் பிரமாண்ட உடுக்கை வடிவில் அமைக்கப்படவுள்ளது. உடுக்கை என்பது சிவபெருமானின் முக்கிய அடையாளம்.


அதேபோல பிரமாண்ட விளக்குக் கம்பங்கள் சூலாயுதம் போன்ற வடிவில் கட்டப்படவுள்ளன. இந்த சூலாயுத வடிவ விளக்குக் கம்பங்கள் சிவபெருமானின் இன்னொரு அடையாளத்தை நினைவுபடுத்தும் என்று நம்பப்படுகிறது.




பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பேசும்போது கூட இது சிவபெருமானின் தலத்தில் உருவாகும் ஸ்டேடியம் என்பதால் இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.